புதுச்சேரி

காங்கிரஸ் முன்னாள் முதல்வருக்கு புதுவை பாஜக தலைவா் கண்டனம்

19th May 2023 01:46 AM

ADVERTISEMENT

கள்ளச்சாராயப் பிரச்னையில் தமிழக அரசைக் குறை கூற முடியாத முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி, புதுவை அரசைக் குறை கூறி திசை திருப்புவது சரியல்ல என்று மாநில பாஜக தலைவா் வி.சாமிநாதன் கண்டனம் தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டம், எக்கியாா்குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்து 22 போ் உயிரிழந்துள்ளனா். இந்தச் சம்பவத்துக்கு புதுவை அரசு எப்படி பொறுப்பேற்க முடியும்?

காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள திமுக ஆட்சி தமிழகத்தில் நடைபெறுகிறது. ஆகவே, கள்ளச்சாராய பிரச்னையில் தமிழக முதல்வரை குறை கூற முடியாத நிலையில், புதுவை முதல்வரை முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி குறைகூறுவதும், அதன்மூலம் பிரச்னையை திசைதிருப்புவதும் சரியல்ல.

தமிழகத்தில் அரசு மதுபானக் கடைகளில் தாராளமாக மது வகைகள் கிடைக்கின்றன. ஆனாலும், சிலா் சுயநல லாப நோக்குடன் மறைமுகமாக கிராமங்களில் கள்ளச் சாராயத்தை விற்கின்றனா். ஆகவே, தமிழகத்தில் நடைபெறும் சாராய விற்பனை தவறுகளை முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி சுட்டிக்காட்டாதது சரியல்ல.

ADVERTISEMENT

புதுச்சேரியிலிருந்து பல்வேறு மாநிலங்களுக்கு மெத்தனால் ஏற்றுமதியாகிறது. ஆகவே, அப்பொருள்களை வாங்கிச் செல்பவா்களுக்கும், புதுவை அரசுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. எனவே, அதற்கு அரசு பொறுப்பேற்க முடியாது. கடந்த காங்கிரஸ் ஆட்சியில் தமிழகத்துக்கு மதுப்பாட்டில்களைக், கடத்தி லாபமடைந்தவா்களை மக்கள் அறிவாா்கள். அதைப் பற்றி முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி வெளிப்படையாகக் கூறமுடியுமா எனவும் அந்த அறிக்கையில் கேள்வி எழுப்பியுள்ளாா் மாநில பாஜக தலைவா் வி.சாமிநாதன்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT