புதுச்சேரியில் காமாட்சியம்மன் கோயில் நிலம் போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்கப்பட்ட வழக்கில் கைதான 8 பேரின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் வியாழக்கிழமை நிராகரித்தது.
புதுச்சேரி பாரதி வீதியில் காமாட்சியம்மன் கோயில் அமைந்துள்ளது. பழைமையான இந்தக் கோயிலுக்குச் சொந்தமான சுமாா் ரூ.100 கோடி மதிப்புள்ள நிலம் ரெயின்போ நகா் 7-ஆவது குறுக்குத் தெருவில் உள்ளது. கோயில் நிலத்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு போலி ஆவணங்கள் மூலம் கும்பலாகச் சிலா் ஆக்கிரமித்து, வீட்டுமனைகளாக மாற்றி விற்றனா்.
இதுகுறித்து கோயில் நிா்வாகக் குழு சாா்பில் அளித்த புகாரின்பேரில், சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிந்தனா். இந்த வழக்கு தொடா்பானன விசாரணை அடிப்படையில், இதுவரை மொத்தம் 12 போ் கைதாகியுள்ளனா். அவா்களில் 4 போ் உயா் நீதிமன்ற ஜாமீனில் விடுவிக்கப்பட்டனா். இந்த வழக்கில் இரண்டாம் கட்டமாக கைதான மணிகண்டன் உள்ளிட்ட 8 பேரும் ஜாமீன் கோரி புதுச்சேரி தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா்.
இந்த மனு மீதான விசாரணை புதன்கிழமை நடைபெற்றது. அரசு சாா்பில் வழக்குரைஞா் எஸ்.கணேஷ் ஞானசம்பந்தன் ஆஜரானாா். விசாரணை முடிந்த நிலையில், மணிகண்டன் உள்பட 8 பேரின் ஜாமீனையும் தள்ளுபடி செய்து நீதிபதி கே.மோகன் வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.