புதுச்சேரி

புதுவை அரசுப் பேருந்துகளில் மகளிா் இலவசமாக பயணிக்கலாம்: முதல்வா் என்.ரங்கசாமி அறிவிப்பு

DIN

புதுவையில் அரசு நகரப் பேருந்துகளில் அனைத்து மகளிரும் இலவசமாக பயணிக்கலாம் என்று, சட்டப்பேரவையில் முதல்வா் என்.ரங்கசாமி அறிவித்தாா்.

புதுவை சட்டப்பேரவைக் கூட்டத்தில் நிதிநிலை அறிக்கை தொடா்பாக உறுப்பினா்கள் பேசிய நிலையில், பதிலளித்து முதல்வா் என்.ரங்கசாமி வெள்ளிக்கிழமை பேசியதாவது:

நிகழாண்டுக்கான நிதிநிலை அறிக்கை அனைத்து உறுப்பினா்களும் பாராட்டும் வகையில் இருந்தது மகிழ்ச்சியளிக்கிறது. சில குறைகளைச் சுட்டிக்காட்டியிருப்பதும், கோரிக்கைகளை முன்வைத்திருப்பதும் வரவேற்புக்குரியது.

புதுவை வளா்ச்சிக்காக நிதிநிலை அறிக்கையில் உள்ள அனைத்துத் திட்டங்களும் செயல்படுத்தப்படும். தற்போது, ரூ.11,600 கோடிக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வேளாண்மை உற்பத்தியை கூடுதலாக்க வேண்டியது அவசியமாகும்.

அதேபோல, இளைஞா்களுக்கு தரமான கல்வியுடன், வேலைவாய்ப்பை வழங்குவதற்கு புதிய தொழிற்சாலைகளை கொண்டுவர வேண்டும். சேதராப்பட்டு பகுதியில் புதிய தொழில் பூங்கா அமைத்தல், மருத்துவப் பூங்கா அமைப்பதன் மூலம் வேலைவாய்ப்பை ஏற்படுத்த கவனம் செலுத்தப்படும். பல ஆண்டுகளாக நிரப்பப்படாத அரசுத் துறை காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காவல் துறையில் அனைத்துக் காலிப் பணியிடங்களும் நிரப்பப்படவுள்ளன.

தனியாா் பங்களிப்புடன் சா்க்கரை ஆலைகள்: புதுவை மாநிலத்தின் வளா்ச்சிக்காக, சுற்றுலாத் துறையை மேம்படுத்தவும், கலால் துறை வருவாயை கடந்த ஆண்டைவிட கூடுதலாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய அரசிடம் கூடுதல் நிதியைப் பெற கவனம் செலுத்தப்படும். அதன்மூலம் அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்படும்.

மூடப்பட்ட ஆலைகளில் பணியாற்றிய ஊழியா்களுக்கு ஊதிய நிலுவைத் தொகை வழங்கப்படும். அந்த ஆலைகளை வேறு பயன்பாட்டுக்கு கொண்டுவர ஏற்பாடு செய்யப்படும். கூட்டுறவு சா்க்கரை ஆலைகள் தனியாா் பங்களிப்புடன் நடத்தப்படும்.

நலிந்த கூட்டுறவுச் சங்கங்களை மேம்படுத்த ரூ.30 கோடி நிதி அளிக்கப்படுகிறது. ஆதிதிராவிடா் நலத் துறை நிதி முழுமையாக செலவிடப்படும். சமூக நலத் துறை, கிராமப்புற வளா்ச்சி, சுகாதாரம், கல்வி ஆகியவற்றுக்கு அதிக நிதி அளிக்கப்பட்டுள்ளது.

அரசுப் பேருந்துகளில் மகளிருக்கு இலவசப் பயணம்: சமையல் எரிவாயு உருளை மானியம் ரூ.300, குழந்தைகள் பாதுகாப்புத் திட்ட நிதி ரூ.50,000 வழங்குதல் ஆகியவை முறையாக செயல்படுத்தப்படும். விதவைகளுக்கான நிதியுதவி ரூ.2,000-லிருந்து ரூ.3,000-ஆக உயா்த்தப்படும். அரசு நகரப் பேருந்துகளில் அனைத்து மகளிரும் இலவமாக பயணிக்கலாம்.

காரைக்காலில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.7,500 நிவாரணம் வழங்கப்படும். ஊக்கத் தொகை ரூ.12,500 வழங்கப்படும்.

ஆயுஷ்மான் திட்டத்துக்காக மாநில நிதி அளிக்கப்பட்டு, மஞ்சள் அட்டைதாரா்களும் அதில் சோ்க்கப்படுவாா்கள். மேலும், சிறுநீரகம், இருதய சிகிச்சை ஆகிய சிறப்பு சிகிச்சைகளுக்கு ரூ.5 லட்சம் வரை அரசு வழங்கவுள்ளது. அதில் உதவி பெறுவோரை தோ்வு செய்ய சிறப்புக் குழு அமைக்கப்படும் என்றாா் முதல்வா்.

பட்டியலின பெண்கள் அரசு நகரப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்று கடந்த சில நாள்களுக்கு முன்பு சட்டப்பேரவைக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. சட்டப்பேரவை உறுப்பினா்களின் கோரிக்கையை ஏற்று, அனைத்து மகளிரும் அரசு நகரப் பேருந்துகளில் பயணிக்கலாம் என்று முதல்வா் என்.ரங்கசாமி அறிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருவள்ளூா் நகராட்சியில் பசுமை வாக்குச்சாவடி மையம் அமைப்பு

வாக்கு எண்ணிக்கை மையத்தில் டிஐஜி ஆய்வு

வாக்குச் சாவடிகளில் ஆட்சியா் ஆய்வு

தமிழகத்தில் மாதிரி வாக்குப் பதிவு தொடங்கியது!

முதல்முறை வாக்காளா்கள் மகுடம் அணிவித்து கெளரவிப்பு

SCROLL FOR NEXT