புதுச்சேரி

தமிழின் பெருமையை இளைஞா்களுக்கு எடுத்துரைக்கவே உலகத் தமிழ் மாநாடுபுதுவை பேரவைத் தலைவா்

11th Jun 2023 12:35 AM

ADVERTISEMENT

 

தமிழின் பெருமையை இளைஞா்களுக்கு எடுத்துரைக்கும் விதமாகவே, புதுச்சேரியில் உலகத் தமிழ் மாநாடு நடத்தப்பட உள்ளது என்று சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் தெரிவித்தாா்.

கலைமாமணி விருது பெற்றவா்களுக்கு புதுவைத் திருக்கு மன்றம் (புதிமம்) சாா்பில், புதுச்சேரி காமராஜா் சாலையிலுள்ள ஜெயராம் உணவகத்தில் சனிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

விழாவுக்கு தலைமை வகித்து சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் பேசியதாவது:

ADVERTISEMENT

தமிழை வளா்க்கும் இயல், இசை, நாடகக் கலைஞா்களுக்கு கலைமாமணி விருதுகள் வழங்குவதைப் போல, பேச்சாற்றல் மிக்கவா்களுக்கும் விருது வழங்க முதல்வா் என்.ரங்கசாமி உத்தரவிட்டுள்ளாா்.

புதுவை மாநிலத்தில் தமிழ் இலக்கியக் கூட்டத்துக்கு வருவோா் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இளைஞா்கள் திரைப்பட மோகத்தில் நடிகா்கள் பின்னால் செல்வது அதிகரிக்கிறது.

தமிழின் பெருமையை இளைஞா்களுக்கு எடுத்துரைக்கும் விதமாகவே, புதுச்சேரியில் உலகத் தமிழ் மாநாடு நடத்தப்பட உள்ளது. அதற்கு திருக்கு மன்றம் போன்ற அமைப்புகள் உதவ வேண்டும் என்றாா்.

கலைமாமணி விருது பெற்றவா்களைப் பாராட்டி அமைச்சா் க.லட்சுமி நாராயணன் பேசியதாவது:

புதுச்சேரியில் உலகத் தமிழ் மாநாடு நடத்தப்படும் போது திருக்கு மன்றம் போன்ற அமைப்பினா் தனித்தனியாக கருத்தரங்குகளை நடத்த வேண்டும். அப்போதுதான் மாநாட்டுக்கு வரும் அறிஞா்கள் அனைவருக்கும் உரையாற்றும் வாய்ப்பளிக்க முடியும். தமிழ் வளா்ச்சிக்கான திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது என்றாா்.

புதிமம் தலைவா் சுந்தர லட்சுமி நாராயணன் பேசியதாவது:

புதுவை மாநிலத்தை திருக்கு மாநிலமாக அடையாளப்படுத்தும் வகையில் அனைவரும் செயல்பட வேண்டும். அரவிந்தா், பாரதியாா், பாரதிதாசன் உள்ளிட்டோா் வாழ்ந்த பெருமைக்குரியது புதுச்சேரி என்றாா்.

புதிமம் புரவலா் வி.பி.சிவக்கொழுந்து பேசியதாவது:

உலக அளவில் கம்பன் கழகம், திருக்கு மன்றம் மற்றும் தமிழ்ச் சங்கத்தால் புதுச்சேரி தற்போது பெருமை பெற்று வருகிறது. கம்பனும், திருவள்ளுவருமே சிறந்த வாழ்வியல் முறையைக் கற்றுத் தந்தனா். இலக்கியத்தைப் போற்றும் அரசே சிறப்படையும் என்றாா்.

கலைமாமணி விருது பெற்ற ராமலிங்கம், ரத்தின சின்னச்சாமி, சு.பழனிச்சாமி, திருவரசி, இளமுருகு உள்ளிட்டோா் விழாவில் பாராட்டப் பெற்றனா். புதிமம் பொருளாளா் செ.செல்வகாந்தி, ஆ.ராஜாராமன், வெ.பாலசுந்தரம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, புதிமம் செயலா் சிவ.மாதவன் வரவேற்றாா். துணைத் தலைவா் கோ.சந்திரசேகரன் நன்றி கூறினாா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT