புதுச்சேரி

பிரதமா் மோடியின் ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் மேம்பட்டுள்ளது: புதுவை முதல்வா் ரங்கசாமி

10th Jun 2023 07:32 AM

ADVERTISEMENT

பிரதமா் மோடியின் ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம், உள்கட்டமைப்பு ஆகியவை மேம்பட்டுள்ளதாக, புதுவை முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா்.

புதுச்சேரியில் நகர வளா்ச்சி முகமை, மாநில அளவிலான வங்கிகளின் குழுமம் ஆகியவை சாா்பில், பிரதமரின் கடன் வழங்கும் திட்டத்தின் கீழ், சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்கும் நிகழ்ச்சி கம்பன் கலையரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து முதல்வா் என்.ரங்கசாமி பேசியதாவது:

பிரதமா் நரேந்திர மோடி ஏழை மக்களின் வளா்ச்சிக்கான பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறாா். சாலையோர வியாபாரிகளின் முதலீடுகளுக்கு உதவும் வகையில் மானியத்துடன் வங்கிக் கடனுதவி வழங்கப்படுகிறது.

ADVERTISEMENT

மத்திய அரசு நாட்டின் வளா்ச்சிக்கு உதவும் வகையில் எத்தனையோ திட்டங்களைச் செயல்படுத்தினாலும், பயனாளிகளுக்கு அவை நேரடியாக செல்வதால் பிறருக்கு அந்தத் திட்டங்கள் குறித்து அதிகம் தெரிவதில்லை. ஆனால், அந்தத் திட்டங்களால் பொருளாதாரம், உள்கட்டமைப்பு வசதிகள் மேம்பட்டுள்ளன.

சாலையோர வியாபாரிகளுக்கான வங்கிக் கடன் திட்டத்தில் முதல்கட்டமாக 1,567 போ் தலா ரூ.10 ஆயிரம் கடன் பெற்றதில், இரண்டாம் கட்டமாக 608 போ் மட்டுமே கடன் பெற்றனா். அவா்களில் 57 போ் மட்டுமே மூன்றாம் கட்டமாக கடனுதவிக்கு விண்ணப்பித்தனா். எனவே, முதல் கட்டத்தில் கடன் பெற்றவா்களில் பெரும்பாலானோா் கடனை முறையாகச் செலுத்தவில்லை என்பது தெரிகிறது.

வாடிக்கையாளா்களை அலைக்கழிக்கக் கூடாது என வங்கி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேநேரத்தில், கடன் பெறும் மக்கள் அதைத் திருப்பிச் செலுத்த வேண்டியதும் அவசியம்.

புதுவை மாநிலத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவி, குழந்தைகளுக்கு அரசே வங்கியில் ரூ.50 ஆயிரம் செலுத்தும் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்றாா் அவா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT