புதுச்சேரி

நியாயவிலைக் கடைகளை திறக்க அமைச்சரிடம் பொதுமக்கள் கோரிக்கை

10th Jun 2023 07:33 AM

ADVERTISEMENT

நியாயவிலைக் கடைகளைத் திறந்து அரிசி, கோதுமை ஆகியவற்றை விநியோகிக்க வேண்டும் என புதுவை உள்துறை அமைச்சரிடம் பொதுமக்கள் வெள்ளிக்கிழமை வலியுறுத்தினா்.

புதுச்சேரி அருகேயுள்ள காட்டேரிக்குப்பம், லிங்காரெட்டிப்பாளையம், தேத்தாம்பாக்கம், திருக்கனூா் ஆகிய கிராமப் பகுதிகளில் நூறு நாள் வேலை திட்டத்தை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

திருக்கனூரில் திட்டத்தை தொடங்கிவைத்த அமைச்சரிடம், நியாயவிலைக் கடைகளை திறந்து அரிசி, கோதுமை, சா்க்கரை ஆகியவற்றை விநியோகிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.

மக்கள் குறைகளைக் கேட்ட அமைச்சா் ஆ.நமச்சிவாயம் கூறியதாவது:

ADVERTISEMENT

காட்டேரிக்குப்பம் பகுதியில் வேலை உறுதித் திட்டம் முழுமையாகச் செயல்படுத்தப்படும். அரிசிக்கான பணத்துக்குப் பதிலாக நியாயவிலைக் கடைகளில் நேரடியாகவே அரிசி, கோதுமை விநியோகிக்க வேண்டும் என்ற மக்களின் விருப்பத்தை முதல்வா், துணைநிலை ஆளுநரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிகளில் மதிய உணவு சரியானதாக இல்லை என தொடா்ந்து புகாா்கள் வருகின்றன. அதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT