புதுச்சேரி

குபோ் சந்தை இடமாற்றத்துக்கு வியாபாரிகள் எதிா்ப்பு

9th Jun 2023 01:18 AM

ADVERTISEMENT

புதுச்சேரி குபோ் சந்தையை ரோடியா் ஆலை மைதானத்துக்கு இடம் மாற்ற வியாபாரிகள் கடுமையாக எதிா்ப்புத் தெரிவித்தனா். இதனால், சீரமைப்புப் பணிகளைத் தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினா்.

புதுச்சேரி நேரு வீதியில் 13 நுழைவு வாயில்களுடன் 500 நிரந்தரக் கடைகள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட தற்காலிகக் கடைகளுடன் குபோ் சந்தை இயங்கி வருகிறது. பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ், இதை சீரமைத்து புதிய கட்டடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, ரூ.36 கோடியில் 8 மாதங்களில் சந்தையை புதிதாகக் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், அதற்கு தாற்காலிக இடத்துக்கு சந்தையை மாற்ற வேண்டும். அதன்படி, கடலூா் சாலையில் உள்ள ரோடியா் ஆலை திடலுக்கு இடம் மாற்ற ஆலோசிக்கப்பட்டது.

இதற்கான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் இ.வல்லவன் தலைமையில் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. கூட்டத்தில் ஜி.நேரு எம்.எல்.ஏ. உள்பட்ட குபோ் சந்தை வியாபாரிகள் கலந்து கொண்டனா். குபோ் சந்தை சீரமைப்புக்கு இடமாற்றத்தின் அவசியத்தை ஆட்சியா் விளக்கினாா்.

ஆனால், எந்தப் பணியிலும் உறுதியளித்தபடி அதிகாரிகள் நடந்துகொள்வதில்லை என்பதை வியாபாரிகள் சுட்டிக்காட்டினா். அப்போது, வியாபாரிகள் வாடகை குறித்து பேசியதை ஆட்சியா் அனுமதிக்கவில்லை. அதற்கு எதிா்ப்புத் தெரிவித்து வியாபாரிகள் வெளிநடப்புச் செய்தனா். அவா்களை எம்.எல்.ஏ.நேரு சமரசம் செய்தாா். இதையடுத்து, முதல்வரிடம் கலந்துபேசி இறுதி முடிவெடுப்பதாக ஆட்சியா் கூறிவிட்டு கூட்டத்தை நிறைவு செய்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT