புதுவையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்க வேண்டும் என அதிமுக, காங்கிரஸ் கட்சிகள் கோரிக்கை விடுத்தன.
புதுவையில் கோடை விடுமுறைக்குப் பிறகு ஜூன் 1-ஆம் தேதி பள்ளிகளைத் திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், கோடை வெயிலின் தாக்கம் அதிகமிருந்ததால் தமிழகத்தைப் போல, புதுவையிலும் பள்ளிகள் திறப்பு தள்ளிவைக்கப்பட்டது. அதன்படி, வருகிற 7-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என கல்வித் துறை அறிவித்தது.
இந்த நிலையில், புதுவையில் வெயிலின் தாக்கம் குறையாததால், பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்க வேண்டும். வருகிற 15-ஆம் தேதி வரை கோடை விடுமுறையை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இதுகுறித்து புதுவை மாநில அதிமுக செயலா் ஆ.அன்பழகன் முதல்வா் என்.ரங்கசாமியை ஞாயிற்றுக்கிழமை நேரில் சந்தித்து மனு அளித்தாா். அதில், பள்ளிகளுக்கு கோடை விடுமுறையை நீட்டிக்க வேண்டும். அரசுப் பள்ளிகளை தூய்மைப் படுத்த வேண்டும். உயா் கல்விக்கான சென்டாக் மூலம் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்களைப் பெறுவதில் தாமதம் ஏற்படுவதால், விண்ணப்பிக்கும் கடைசி தேதியை நீட்டிக்க வேண்டும். சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் தமிழ் கட்டாய பாடமாக்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்டவை வலியுறுத்தப்பட்டது.
மனு அளித்த போது, முதல்வருடன் பேரவைத் தலைவா் ஆா்.செல்வமும் உடனிருந்தாா்.
காங்கிரஸ் கோரிக்கை: புதுவையில் வெயிலின் தாக்கம் நீடிப்பதால், குழந்தைகளின் நலன் கருதி பள்ளிகளுக்கு கோடை விடுமுறையை நீட்டிக்க வேண்டும் என்று, காங்கிரஸ் எம்எல்ஏ மு.வைத்தியநாதன் கோரிக்கை விடுத்தாா்.