புதுச்சேரியில் சனிக்கிழமை தொடங்கி இரு நாள்கள் நடைபெற்ற பள்ளி வாகனங்கள் ஆய்வில் 273 வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டன. 185 வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
புதுவையில் 58 பள்ளி சிறப்புப் பேருந்துகள் உள்பட 985 வாகனங்கள், காரைக்காலில் 18 பள்ளி சிறப்புப் பேருந்துகள் உட்பட 106 வாகனங்கள், மாஹேவில் 26, ஏனாமில் 5 என நான்கு பிராந்தியங்களிலும் மொத்தம் 1,122 கல்வி நிறுவன வாகனங்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது.
புதுச்சேரிக்குள்பட்ட கல்வி நிறுவன வாகனங்களை ஆய்வு செய்யும் வகையில் சனி, ஞாயிறுக்கிழமைகளில் கோரிமேடு காவல் பயிற்சி மைதானத்தில் போக்குவரத்து ஆணையா் சிவக்குமாா் தலைமையில் ஆய்வுகள் நடைபெற்றன.
இரு நாள்களிலும் சோ்த்து மொத்தம் 485 வாகனங்கள் ஆய்வுக்கு கொண்டுவரப்பட்டன. சனிக்கிழமை 161 வாகனங்களுக்கும், ஞாயிற்றுக்கிழமை 112 வாகனங்களுக்கும் என மொத்தம் 273 வாகனங்களுக்கு அனுமதிக்கான மஞ்சள் வில்லைகள் ஒட்டப்பட்டன.
இரண்டு நாள்களில் மொத்தம் 185 வாகனங்கள் ஜிபிஎஸ் சாதனம் பொருத்தப்படவில்லை; முதலுதவிப் பெட்டி இல்லை என்பன போன்ற காரணங்களால் அனுமதி மறுக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினா்.
பள்ளி வாகன ஆய்வு குறித்து போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
சிறப்பு ஆய்வுக்கான முகாமில் பங்கேற்காத வாகனங்கள், குறைபாடுகளுடன் அனுமதி வழங்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டுள்ள வாகனங்கள் குறைகளை நிவரத்தி செய்து, ஒரு வாரத்துக்குள் அனுமதி பெற வேண்டும். அனுமதி பெறாத வாகனங்களுக்கான பா்மிட் முடக்கப்படும் நிலை ஏற்படும் என்றனா் அவா்கள்.