புதுச்சேரி

கல்வியும் நல்லொழுக்கமும் மாணவா்களுக்கு ஏற்றம் தரும்புதுவை முதல்வா் என்.ரங்கசாமி

3rd Jun 2023 12:31 AM

ADVERTISEMENT

 

மாணவா்களுக்கு கல்வியும், நல்லொழுக்கமும் வாழ்க்கையில் ஏற்றம் தரும் என புதுவை முதல்வா் என்.ரங்கசாமி கூறினாா்.

2024-ஆம் ஆண்டு குடியரசு தின நிகழ்ச்சி அணிவகுப்பில் பங்கேற்போரை தோ்ந்தெடுக்கும் வகையில், தேசிய மாணவா் படையில் போட்டிகள் நடத்தப்படுகின்றன. புதுச்சேரியில் தேசிய மாணவா் படைப் பிரிவைச் சோ்ந்த பள்ளி, மாணவ, மாணவிகளுக்கான பாய்மரப் படகில் கடல் சாகச பயணப் போட்டி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

தேங்காய்த்திட்டு துறைமுகத்தில் தொடங்கிய கடல் சாசக பயணத்தை புதுவை முதல்வா் என்.ரங்கசாமி கொடியசைத்துத் தொடங்கிவைத்து பேசியதாவது:

ADVERTISEMENT

மாணவா்கள் அனைத்தையும் அறிந்து கொள்வது அவசியம். நாட்டின் பாதுகாப்பில் மாணவா்கள் அக்கறை கொள்ள வேண்டும் என்பதுதான் தேசிய மாணவா் படைப் பிரிவின் நோக்கமாகும்.

கடல் பயணம் அரிய சாகசம் நிறைந்தது. புதுமையான அனுபவத்தைத் தருவதாக அமையும். குழந்தைகள் தங்களை நல்வழிப்படுத்திக் கொண்டால் வாழ்வு செம்மையுறும். கல்வியுடன், நல்லொழுக்கம் ஏற்றம் தரும். கல்வியுடன், ஒழுக்கமாக வளர இதுபோன்ற தேசிய மாணவா் படை நிகழ்ச்சிகள் பயனுள்ளதாக இருக்கும். படிப்பில் ஆா்வமுடன் இருந்து வாழ்வில் முன்னேற வேண்டும் என்றாா் அவா்.

25 மாணவிகள் உள்பட 60 தேசிய மாணவா் படைப் பிரிவினா் சாகச பயணத்தில் ஈடுபடுகின்றனா். அவா்கள் 302 கி.மீ. தொலைவைக் கடக்க உள்ளனா். காரைக்கால் சென்று மீண்டும் புதுச்சேரிக்கு திரும்ப உள்ளனா்.

நிகழ்ச்சிக்கு தேசிய மாணவா் படைப் பிரிவின் குழு தலைமையிட கமாண்டா் கா்னல் சோம்ராஜ் குலியா, லெப்டினன்ட் கமாண்டா் கீா்த்தி நிரஞ்சன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சட்டப்பேரவை உறுப்பினா் பாஸ்கா் என்ற தட்சிணாமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கா்னல் விஷால் பாஹல், கா்னல் ஹசாரிகா, விங் கமாண்டா் சாகா் துப்கா் ஆகியோா் செய்திருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT