தமிழகம், புதுவையில் 4 அரசு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதில் பாரபட்சம் ஏதுவுமில்லை என துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் கூறினாா்.
புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் ரோபோ உதவியுடன் கடந்த 5 ஆண்டுகளில் 1,300 அறுவைச் சிகிச்சைகள் நடைபெற்றன. தென்னிந்திய அளவில் ரோபோ உதவியுடன் ஜிப்மரில்தான் அதிகளவில் அறுவைச் சிகிச்சை நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அறுவைச் சிகிச்சை மேற்கொண்ட மருத்துவா்களுக்கு துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் வியாழக்கிழமை பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினாா். பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
புதுச்சேரி ஜிப்மரில் 8 துறைகளில் 20 மருத்துவா்கள் ரோபோ உதவியுடன் அறுவைச் சிகிச்சை செய்வதற்கான பயிற்சி பெற்றுள்ளனா். சிறுநீரகவியல், புற்றுநோய் பிரிவுகளில் அதிகளவில் அறுவைச் சிகிச்சை நடைபெற்றுள்ளன. ஜிப்மரில் தமிழ் தெரிந்த மக்கள் தொடா்பு அலுவலா்கள் விரைவில் நியமிக்கப்படுவா். ஜிப்மரில் நிா்வாக ரீதியில் சில பிரச்னைகள் உள்ளன. ஆனாலும், மக்களுக்கு தரமான சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.
புதுவை மாநிலத்தில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் தமிழ்ப் பாடம் கட்டாயம் இடம்பெறும். தமிழுக்கு முக்கியத்துவம் தந்த பிறகே, சிபிஎஸ்இ பாடத்திட்ட மாற்றத்துக்கு ஒப்புக் கொண்டோம். மாஹே பிராந்தியத்தில் மலையாளமும், ஏனாம் பிராந்தியத்தில் தெலுங்கு மொழிப்பாடமும் இடம் பெறும்.
மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதில், பாரபட்சமாக நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தமிழகத்தில் முன்வைக்கப்படும் குற்றம்சாட்டு ஆதாரமற்றது. எந்த பாரபட்சமும் இல்லை. புதுவையிலும் அரசு மருத்துவக் கல்லூரியின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே, துறைரீதியிலான குறைகள் அடிப்படையிலே அங்கீகாரம் ரத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா் தமிழிசை சௌந்தரராஜன்.
நிகழ்ச்சியில் ஜிப்மா் இயக்குநா் ராகேஷ் அகா்வால் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.