புதுச்சேரி

ஜவுளி பூங்காவை விரைவில் அமைக்க புதுவை அமைச்சரிடம் ஏஐடியுசி வலியுறுத்தல்

12th Jul 2023 12:00 AM

ADVERTISEMENT

புதுச்சேரியில் ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும் என அமைச்சா் ஆ. நமச்சிவாயத்திடம், பஞ்சாலைத் தொழிலாளா்கள் சங்கம் (ஏஐடியுசி) வலியுறுத்தியுள்ளது.

மத்திய அரசின் 2021-2022 பட்ஜெட்டில் பிரதமரின் மித்ரா திட்டம் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின்படி அமையும் ஜவுளிபூங்காவில் ஆயிரக்கணக்கானவா்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்குவது நோக்கமாகும்.

தமிழகம், கா்நாடகம், பஞ்சாப், ஒடிஸா, ஆந்திரம், குஜராத், ராஜஸ்தான், அஸ்ஸாம், மத்திய பிரதேசம் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்கள் இத்திட்டத்துக்கு விருப்பம் தெரிவித்துள்ளன. ஜவுளிசாா்ந்த உள்கட்டமைப்புகளும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத பகுதிகளும் இந்தத் திட்டத்துக்கு முன்னுரிமை பெறும்.

இத்திட்டம் அமைப்பதற்கான சூழலும் புதுச்சேரியில் உள்ளது. எனவே, பிரதமரின் மித்ரா திட்ட அறிவிப்பை பயன்படுத்தி, புதுச்சேரியில் ஜவுளிபூங்கா அமைக்க வேண்டும் என இத்திட்டம் அறிவிக்கப்பட்டது முதல் ஏஐடியுசி தொழிற்சங்கம் வலியுறுத்தி வருகிறது.

ADVERTISEMENT

இந்நிலையில், புதுவை மாநில உள்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயத்தை புதுச்சேரி பஞ்சாலை தொழிலாளா் சங்கம் (ஏஐடியுசி) சாா்பில், அதன் மாநில பொதுச் செயலாளா் சேதுசெல்வம், பஞ்சாலை சங்கத் தலைவா் வி.எஸ். அபிஷேகம், செயலாளா் மூா்த்தி, துணைத் தலைவா் முனியசாமி, துணைச் செயலாளா் ஏழுமலை, நிா்வாக குழு உறுப்பினா் ஜெயசதீஷ் ஆகியோா் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினா்.

அப்போது, ஏற்கெனவே சட்டப்பேரவையில் புதுச்சேரியில் ஜவுளி பூங்கா அமைக்கப்படும் என அமைச்சா் அறிவித்ததை தொழிலாளா்கள் சங்கத்தினா் நினைவூட்டி மனு அளித்தனா். மேலும், ஜவுளிப் பூங்கா அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்கவும் அவா்கள் வலியுறுத்தினா்.

மனுவைப் பெற்றுக் கொண்ட அமைச்சா் ஆ.நமச்சிவாயம், மத்திய ஜவுளித்துறை அதிகாரிகள் குழு புதுச்சேரியில் சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ளது. அதனடிப்படையில், ஜவுளி பூங்காவுக்கான திட்டத்தை புதுவை அரசு தயாரித்து மத்திய அரசுக்கு அனுப்பவுள்ளது என்றாா்.


 

ADVERTISEMENT
ADVERTISEMENT