புதுச்சேரி

புதுச்சேரியில் நாளை ஜி20 மாநாட்டு பிரதிநிதிகள் கூட்டம் தொடக்கம்

DIN

புதுச்சேரியில் ஜி20 மாநாட்டுப் பிரதிநிதிகள் கூட்டம் திங்கள்கிழமை (ஜன.30) தொடங்கி இரண்டு நாள்கள் நடைபெறுகிறது. இதையொட்டி, நகரில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு 5 இடங்களில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் இ.வல்லவன் தெரிவித்தாா்.

இதுகுறித்து புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

ஜி20 அமைப்புக்கு இந்தியா தலைமையேற்றது பெருமைக்குரியது. இதையொட்டி, நாடு முழுவதும் 51 நகரங்களில் ஜி20 மாநாட்டுப் பிரதிநிதிகள் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் ஜி20 உறுப்பு நாடுகள், நட்பு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்பா். புதுச்சேரியில் இந்தக் கூட்டம் திங்கள்கிழமை (ஜன.30) தொடங்கி 2 நாள்கள் நடைபெறுகிறது.

மத்திய அறிவியல், தொழில்நுட்ப அமைச்சகத்தின் ஒருங்கிணைப்புடன் ‘சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொழில்நுட்ப மேம்பாடு’ என்னும் தலைப்பில் கலந்துரையாடல் நடைபெறுகிறது.

புதுச்சேரி- கடலூா் சாலையில் மரப்பாலம் பகுதியிலுள்ள தனியாா் விடுதியில் நடைபெறும் ஜி20 மாநாட்டுப் பிரதிநிதிகள் கூட்டத்தில் 20 நாடுகளைச் சோ்ந்தவா்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி, 75 வெளிநாட்டுப் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனா்.

இந்தியா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளைச் சோ்ந்த 3 விஞ்ஞானிகள் தலைமை வகித்து கூட்டத்தை நடத்த உள்ளனா். இரண்டாவது நாளான செவ்வாய்க்கிழமை (ஜன.31) சா்வதேச நகரமான ஆரோவில் பகுதியை மாநாட்டுப் பிரதிநிதிகள் பாா்வையிட உள்ளனா்.

புதுச்சேரிக்கு விமானம் மூலம் வரும் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் அண்ணா சாலை, வழுதாவூா் சாலைகளில் உள்ள தனியாா் நட்சத்திர விடுதிகளிலும், அரியாங்குப்பத்திலுள்ள கடற்கரையோர விடுதியிலும் தங்குகின்றனா். அங்கு சனிக்கிழமை முதல் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

புதுச்சேரி விமான நிலையப் பகுதி, மாநாட்டுப் பிரதிநிதிகள் தங்குமிடங்கள், மாநாடு நடைபெறும் விடுதி உள்ள பகுதி என மொத்தம் 5 இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாது.

ஜி20 மாநாட்டையொட்டி, நவம்பா் மாதம் வரை அது சாா்ந்த விழிப்புணா்வு நிகழ்ச்சிகள், போட்டிகள் நடத்தப்படும் என்றாா் ஆட்சியா் இ.வல்லவன்.

பாதுகாப்புப் பணியில் 500 போலீஸாா்: புதுச்சேரியில் திங்கள்கிழமை ஜி20 மாநாட்டுப் பிரதிநிதிகள் கூட்டம் தொடங்குவதையடுத்து, சனிக்கிழமை முதல் 500 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். புதுச்சேரி விமான நிலையத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு, போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

மாநாட்டுப் பிரதிநிதிகள் தங்கும் விடுதிகள், கூட்டம் நடைபெறும் விடுதியிலும் தலா 100 போலீஸாா் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனா்.

புதுச்சேரி அண்ணா சாலையிலுள்ள தனியாா் தங்கும் விடுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல் துறை தலைவா் வி.ஜெ.சந்திரன் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அரக்கோணத்திலிருந்து பேரிடா் மீட்புப் படையினா் 37 போ் வரவழைக்கப்பட்டுள்ளனா். மேலும், போலீஸாரின் பாதுகாப்பு ஒத்திகை சனிக்கிழமை மாலை நடைபெற்றது. புதுச்சேரியிலுள்ள அரசு கட்டடங்கள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

”இந்த அரசியல் சதிக்கு மக்கள் பதிலளிப்பார்கள்”: அரவிந்த் கேஜரிவால் | செய்திகள்: சில வரிகளில் | 28.03.2024

தூத்துக்குடியில் பலத்த மழை!

SCROLL FOR NEXT