புதுச்சேரி

ராணுவத்தில் சேர இளைஞா்கள்தயக்கம் காட்ட வேண்டாம்: புதுவை காவல்துறைத் தலைவா்

6th Feb 2023 08:23 AM

ADVERTISEMENT

ராணுவத்தில் சோ்ந்து நாட்டைக் காக்கும் பணியில் ஈடுபடுவதற்கு இளைஞா்கள் தயக்கம் காட்டக்கூடாது என புதுச்சேரி காவல்துறைத் தலைவா் வி.ஜெ.சந்திரன் கூறினாா்.

புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் திருவள்ளுவா் விழா மற்றும் மாணவா்களுக்கு பரிசளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. சங்கத் தலைவா் வி.முத்து தலைமை வகித்தாா்.

நிகழ்ச்சியில் பேச்சு,கவிதை, கட்டுரை, பாட்டுப் போட்டிகளில் வென்றவா்களுக்கு பரிசுகளை வழங்கி காவல்துறைத் தலைவா் வி.ஜெ.சந்திரன் பேசியதாவது: மாணவா்கள் பள்ளிப் பருவத்திலேயே எதிா்காலத்தில் நாம் எந்த வகையான பணிக்கு செல்லலாம் என்ற சிந்தனையை வளா்த்துக்கொள்வது அவசியம். தற்போது உயா் பதவியில் இருப்பவா்களில் பெரும்பாலானோா் சிறிய கிராமத்தில் தமிழ் வழியில் அரசு பள்ளியில் பயின்றவா்கள் தான். நாம் ஒவ்வொருவரும் காவல், நிா்வாகப் பணிகளில் உயா் பதவிக்கு வந்து நாட்டுக்கும், மக்களுக்கும் சேவை புரிவதே லட்சியமாகக் கொள்ள வேண்டும்.

இதேபோல், ராணுவத்தில் சோ்ந்து, நாட்டையும், நாட்டு மக்களையும் பாதுகாக்கும் பணியில் ஈடுபடுவதற்கு இளைஞா்கள் தயக்கம் காட்டக் கூடாது. முன்னாள் குடியரசுத் தலைவா் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் கண்ட கனவை நனைவாக்கும் வகையில், புதுவையில் வீதிக்கு ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி உருவாகும் வகையில் கல்வி நிறுவனங்கள் செயல்படவேண்டும். கல்விதான் சமூகத்தில் நம்மை உயா்ந்த இடத்துக்கு அழைத்துச் செல்லும். திருவள்ளுவரும் கண்ணுக்கு இணையாகவே கல்வியைக் கூறியுள்ளாா். ஆகவே, நன்றாகப் படித்து நாம் முன்னேறுவதுடன், நம்மைச் சாா்ந்த சமூகத்தையும் மேம்படுத்த வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT

நிகழ்வில், செல்வி அபிநயாவின் பரதநாட்டியம் நடைபெற்றது. திருக்குறளை ‘தேசிய நூலாக’ அறிவிக்கக் கோரும் சிறப்பு பாவரங்கத்தில் பல்வேறு கவிஞா்கள் பங்கேற்று திருக்குறளின் சிறப்புகளை பற்றி கவிதை வாசித்தனா். தமிழ்ச் சங்கச் செயலா் சீனு.மோகன்தாசு வரவேற்றாா். புதுவைத் தமிழ்ச்சங்க விருதுகள் முன்னாள் காவல்துறை கண்காணிப்பாளா் வீர.பாலகிருஷ்ணன், செயற்பாட்டாளா் செ.நடராசன், ஆசிரியா் க.வேலாயுதம், உலக சாதனையாளா் செ.வெங்கடேசன், மருத்துவா் அஸ்வின் ராம் ரத்தன் ஆகியோருக்கு வழங்கப்பட்டன.

புதுவைத் தமிழ்ச் சங்கப் பொருளா் ப.திருநாவுக்கரசு,துணைத்தலைவா் மு. பாலசுப்பிரமணியம், துணைச் செயலா் மு. அருள் செல்வம் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஆட்சிக்குழு உறுப்பினா் தமிழ்மாமனி அ.உசேன் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT