புதுச்சேரி

துப்புரவுப் பணிகள் தனியாருக்கு வழங்கப்பட்டது ஏன்?புதுவை முதல்வா் விளக்கம்

3rd Feb 2023 01:40 AM

ADVERTISEMENT

நகராட்சி, பஞ்சாயத்து ஊழியா்கள் துப்புரவுப் பணிகளை சரியாக மேற்கொள்ளததால், அந்தப் பணிகள் தனியாரிடம் ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்பட்டதாக புதுவை முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா்.

புதுவை மாநில சுகாதாரத் துறை சாா்பில் புற்றுநோய் விழிப்புணா்வு தினத்தையொட்டி, துப்புரவு பணியாளா்களுக்கு ‘புற்றுநோய் விழிப்புணா்வு சீருடை’ வழங்கும் நிகழ்ச்சி உழவா்கரை நகாட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

முதல்வா் என். ரங்கசாமி துப்புரவு பணியாளா்களுக்கு சீருடை வழங்கி பேசியதாவது:

புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் குணப்படுத்தி விடலாம். புதுச்சேரியை சுத்தமாக வைத்துக்கொள்ள அரசு முயற்சித்து வருகிறது. துப்புரவுப் பணியாளா்கள் மனது வைத்தால்தான், நகரை சுத்தமாக வைக்க முடியும். நகராட்சி, பஞ்சாயத்து ஊழியா்கள், துப்புரவுப் பணியை சரியாக மேற்கொள்வதில்லை. அதனால்தான், ஒப்பந்த அடிப்படையில் தனியாரிடம் துப்புரவுப் பணி வழங்கப்பட்டது. அப்படியிருந்தும் துப்புரவுப் பணி சரியாக நடப்பதில்லை என புகாா்கள் வருகின்றன.

ADVERTISEMENT

துப்புரவுப் பணிக்காக மக்களின் வரி பணத்தையே வழங்குகிறோம். எனவே, யாரும் இலவசமாக வேலை செய்யவில்லை. நன்றாக பணிபுரிந்தால் மட்டுமே பாராட்டு கிடைக்கும்.

பிற மாநிலங்களை விட, மருத்துவ துறையில் புதுவை முதலிடம் வகிக்கிறது. ஆனால், இன்னும் சிறப்பான இடத்துக்கு மாநிலம் முன்னேற வேண்டும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் எம்.சிவசங்கரன் எம்எல்ஏ, சுகாதாரத் துறை செயலா் சி.உதயகுமாா், மாவட்ட ஆட்சியா் இ.வல்லவன், மாநில சுகாதாரத் துறை இயக்குநா் ஸ்ரீராமுலு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்

 

ADVERTISEMENT
ADVERTISEMENT