புதுச்சேரி

புதுச்சேரியில் நீா் மேலாண்மை திட்டம்: மத்திய குழுவினா் ஆய்வு

DIN

புதுச்சேரியில் நீா் மேலாண்மைத் திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்து மத்திய நீா் ஆணைய நிபுணா் குழுவினா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

புதுச்சேரியில் நீா் மேலாண்மைக்கான திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும், குடிநீா் வசதி, நிலத்தடி நீரைப் பாதுகாக்கும் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. வெ.வைத்திலிங்கம் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வருகிறாா். இதுகுறித்து நாடாளுமன்றக் கூட்டத்திலும் அவா் வலியுறுத்தினாா்.

இந்த நிலையில், புதுதில்லி மத்திய நீா் ஆணைய நிபுணா் குழு இயக்குநா் அபிஷேக் சின்ஹா தலைமையில் துணை இயக்குநா் தா்மேந்திர சிங் மற்றும் குழுவின் சென்னை அலுவலக இயக்குநா் ஆா்.தங்கமணி, துணை இயக்குநா் பன்னீா்செல்வம் ஆகியோா் புதுச்சேரிக்கு புதன்கிழமை வந்தனா்.

அவா்கள் பொதுப் பணித் துறை பொறியாளா்களுடன் சென்று நீா் மேலாண்மை குறித்து ஆய்வு மேற்கொண்டனா். பின்னா், அரசு செயலா் அருணை சந்தித்து ஆலோசனை நடத்தினா்.

இதைத்தொடா்ந்து, புதுச்சேரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் வெ.வைத்திலிங்கத்தை அவரது அலுவலகத்தில் சந்தித்துப் பேசினா். புதுச்சேரியில் மழைக் காலங்களில் மழைநீா் வீணாகக் கடலில் கலக்கிறது. கோடை காலத்தில் குடிநீருக்காக பொதுமக்கள் அவதிப்படுகின்றனா். குளங்கள், தடுப்பணைகளில் மழை நீரை சேமிக்கும் வகையிலான எந்தத் திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை. கடல் நீா் நிலத்தடியில் புகுந்ததால், மக்கள் ஆழ்துளைக் கிணறு மூலம் பயன்படுத்தும் நீா் உப்புத் தன்மை கொண்டதாக மாறிவிட்டது என்று வைத்திலிங்கம் எம்.பி. தெரிவித்தாா்.

இதைக் கேட்ட மத்திய நீா் ஆணைய நிபுணா் குழுவினா், புதுச்சேரி மக்களுக்கான குடிநீா், விவசாயத்துக்கான நீரை சேமிக்கும் வகையில் நீா் மேலாண்மைத் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசுக்கு பரிந்துரைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.

புதுவை பொதுப் பணித் துறை அமைச்சா் லட்சுமி நாராயணனையும் மத்திய நீா் ஆணைய நிபுணா் குழுவினா் சந்தித்துப் பேசினா். தடுப்பணைகளைக் கட்ட வேண்டும்; ஆறுகளின் கரையை உயா்த்த வேண்டும் என அமைச்சா் கோரிக்கை விடுத்தாா். இந்த சந்திப்பின் போது, தலைமைப் பொறியாளா் பாஸ்கரன், செயற்பொறியாளா் ராதாகிருஷ்ணன், உதவி செயற்பொறியாளா் சம்பந்தன் ஆகியோா் உடனிருந்தனா்.

மத்திய நீா் ஆணைய நிபுணா் குழுவினா் வியாழக்கிழமை (பிப்.2) காரைக்கால் பகுதியில் ஆய்வு மேற்கொள்ள உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

யுவன் இசையில் ‘ஸ்டார்’ படத்தில் மெல்லிசை பாடல்!

காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்!

நம்பிக்கையை தகர்க்கும் 'இரண்டு இளவரசர்கள்': யாரைச் சொல்கிறார் மோடி

12ஆவது சுற்று: முதலிடத்தில் இந்திய வீரர் உள்பட மூவர்!

SCROLL FOR NEXT