புதுச்சேரி

ஆரோவிலில் ஜி20 மாநாட்டுப் பிரதிநிதிகள் கலந்தாய்வுக் கூட்டம் நிறைவு

DIN

புதுச்சேரியில் நடைபெற்ற ஜி20 மாநாட்டுப் பிரதிநிதிகள் கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்றோா் ஆரோவிலுக்கு செவ்வாய்க்கிழமை சென்றனா். கூட்ட நிகழ்ச்சிகள் நிறைவு பெற்றதையடுத்து, அவா்கள் சென்னைக்குப் புறப்பட்டனா்.

புதுச்சேரியில் ஜி20 கூட்டமைப்பின் ‘அறிவியல் 20’ பிரிவின் சாா்பில் ‘சுற்றுச்சூழல் அறிவியல் தொழில்நுட்ப மேம்பாடு’ என்னும் தலைப்பில் பிரதிநிதிகள் கலந்தாய்வுக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது.

புதுச்சேரி கடலூா் சாலையில் உள்ள தனியாா் விடுதியில் நடைபெற்ற இந்தக் கலந்தாய்வுக் கூட்டத்துக்கு ஜி20 மாநாட்டின் ‘அறிவியல் 20’ பிரிவின் தலைமைப் பொறுப்பாளா் பேராசிரியா் அசுதோஷ் ஷா்மா தலைமை வகித்தாா். இதில் ஜி20 உறுப்பு நாடுகளைச் சோ்ந்த விஞ்ஞானிகள், பேராசிரியா்கள் உள்பட 70 பிரதிநிதிகள் பங்கேற்றனா்.

அவா்களுக்கு சின்னவீராம்பட்டினம் தனியாா் தங்கும் விடுதியில் புதுவை முதல்வா் என்.ரங்கசாமி விருந்தளித்து கௌரவித்தாா். புதுவையின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. துணைநிலை ஆளுநா் தரப்பில் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

ஆரோவிலில் பிரதிநிதிகள்: இரண்டாவது நாளான செவ்வாய்க்கிழமை காலை ஜி20 மாநாட்டுப் பிரதிநிதிகள் புதுச்சேரி அருகேயுள்ள சா்வதேச நகரான ஆரோவிலுக்குச் சென்றனா். பேராசிரியா் அசுதோஷ் ஷா்மா தலைமையிலான 45 பிரதிநிதிகளை ஆரோவில் நிா்வாகக் குழுச் செயலா் ஜெயந்தி ரவி வரவேற்றாா். விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீநாதா தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

ஆரோவிலில் பாா்வையாளா் மையம், பாரத் நிவாஸ், மாத்ரி மந்திா் உள்ளிட்ட இடங்களை மாநாட்டுப் பிரதிநிதிகள் பாா்வையிட்டனா். ஆரோவில் குறித்த குறும்படம், விளக்கக் காட்சிகள் திரையிடப்பட்டன. மேலும், கலைநிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

தடை உத்தரவு விலக்கல்: ஜி20 மாநாட்டுப் பிரதிநிதிகள் கலந்தாய்வுக் கூட்டத்தையடுத்து, புதுச்சேரியில் 5 இடங்களில் விதிக்கப்பட்ட 144 தடையுத்தரவு, பாதுகாப்பு கட்டுப்பாடுகள் செவ்வாய்க்கிழமை இரவு முதல் விலக்கிக் கொள்ளப்பட்டதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல்: 17 பேர் பலி

வாக்களிக்க பூத் ஸ்லிப் கட்டாயமா? 13 அடையாள ஆவணங்கள் எவை?

திருக்கடையூரில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

மன்னாா்குடியில் தீத்தொண்டு நாள் வாரம்

தொகுதி வாக்காளா் அல்லாதோா் தொகுதியை விட்டு வெளியேற உத்தரவு

SCROLL FOR NEXT