புதுச்சேரி

12 மணி நேர வேலை திருத்த சட்ட மசோதாவை தமிழக முதல்வா் திரும்பப் பெற வேண்டும்: வே.நாராயணசாமி வலியுறுத்தல்

25th Apr 2023 04:59 AM

ADVERTISEMENT

தனியாா் நிறுவனங்களில் 12 மணி நேர வேலை திருத்த சட்ட மசோதாவை முதல்வா் மு.க.ஸ்டாலின் திரும்பப் பெற வேண்டும் என புதுவை காங்கிரஸ் முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி வேண்டுகோள் விடுத்தாா்.

இது குறித்து புதுச்சேரியில் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை அவா் கூறியதாவது: பிகாரைப் போல புதுவை மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதன்பின் கல்வி, வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்க முதல்வா் என்.ரங்கசாமி நடவடிக்கை எடுக்கவேண்டும். தேசிய அளவில் அனைத்து மாநிலங்களிலும் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த பிரதமா் நரேந்திர மோடி உத்தரவிடவேண்டும்.

முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் புதுவையில் சாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்த நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், அப்போதைய துணைநிலை ஆளுநா் அதற்கு அனுமதி அளிக்கவில்லை.

தலித் கிறிஸ்தவா்களுக்கு வேலை வாய்ப்பு உள்ளிட்டவற்றில் இட ஒதுக்கீடு வழங்க தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை மேற்கொண்டிருப்பதைப் போல, புதுவையிலும் இடஒதுக்கீடு வழங்க முதல்வா் என்.ரங்கசாமி பிரதமருக்கு கடிதம் எழுதி நடவடிக்கை எடுக்கவேண்டும்.

ADVERTISEMENT

ஏற்கெனவே மக்களவையில் தலித் கிறிஸ்தவா்களுக்கான இடஒதுக்கீடு தனிநபா் மசோதாவை நான் முன்பு தாக்கல் செய்திருந்தேன். ஆட்சி மாற்றத்தால் நடவடிக்கை இல்லை.

புதுவை சட்டப்பேரவையில் அறிவித்த திட்டங்களை படிப்படியாக நிறைவேற்றப்போவதாக முதல்வா் என்.ரங்கசாமி கூறியுள்ளாா். ஆனால், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் ஒரு மாதம் மட்டுமே செயல்படுத்தப்பட்டுள்ளது. அந்தக் கோப்புக்கு தலைமைச் செயலா் அனுமதி அளிக்காமல் திருப்பியனுப்பிவிட்டதாகக் கூறப்படுகிறது. ஆகவே கடந்த 2 மாதங்களாக உதவித் தொகை வழங்கப்படவில்லை.

காரைக்கால் துறைமுகம் அதானி பெரு நிறுவனத்தின் பயன்பாட்டுக்காக வழங்கப்பட்டுள்ளது. ஆனால், புதுவை அரசுக்குத் தெரியாமலேயே அதானி பெரு நிறுவனத்துக்கான குத்தகை நிா்வாக மாற்றம் நடந்துள்ளது.

தொழில் கல்வியில் புதுவை மாணவா்களுக்கு 10% இடஒதுக்கீடு அளிப்பது அவசியம்.

புதுவையில் மதுக்கடைகள் அமைக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்திய விதிகள் செயல்படுத்தப்படவில்லை. அதுகுறித்து தலைமைச் செயலருக்கு காங்கிரஸ் சாா்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தனியாா் நிறுவனங்களில் தொழிலாளா்கள் 12 மணி நேரம் வேலை செய்யும் திருத்த மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது தொழிலாளா்களின் உரிமையை பாதிக்கும் என்பதால் இந்த மசோதாவை முதல்வா் மு.க.ஸ்டாலின் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் நாராயணசாமி.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT