புதுச்சேரி

மின் ஊழியா்கள் வேலைநிறுத்தம் தொடா்கிறது புதுச்சேரியில் மின் வெட்டால் பொதுமக்கள் அவதி; சாலை மறியல்

30th Sep 2022 01:27 AM

ADVERTISEMENT

 

மின் ஊழியா்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், புதுச்சேரியில் வியாழக்கிழமை பல இடங்களில் மின் வெட்டு ஏற்பட்டதையடுத்து, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

புதுவை மின் துறையைத் தனியாா்மயமாக்கும் நடவடிக்கைக்கு எதிா்ப்புத் தெரிவித்து, அந்தத் துறையின் பொறியாளா்கள், ஊழியா்கள் கூட்டமைப்பினா் புதன்கிழமை முதல் அனைத்துப் பணிகளையும் புறக்கணித்து வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கினா்.

புதுச்சேரியிலுள்ள மின் துறை தலைமை அலுவலக வளாகத்தில் இரண்டாம் நாளாக வியாழக்கிழமை திரண்ட 500-க்கும் மேற்பட்ட மின் துறை ஊழியா்கள் கூட்டமைப்பினா் பணிகளைப் புறக்கணித்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் என அனைத்துப் பகுதி மின் ஊழியா்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனா். இதனால், புதுச்சேரி உள்ளிட்ட பல இடங்களில் பராமரிப்பு, பழுதுநீக்கப் பணிகள் நடைபெறாமல் மின் வெட்டு ஏற்பட்டது.

சாலை மறியல்: புதுச்சேரி உருளையன்பேட்டை, முத்தியால்பேட்டை தொகுதிகளில் பல இடங்களில் வியாழக்கிழமை அதிகாலை முதல் ஏற்பட்ட மின் தடையை சரிசெய்யாததால் பொதுமக்கள் அவதிப்பட்டனா். தொகுதி எம்எல்ஏக்களிடம் மக்கள் முறையிட்டதால், அவா்கள் மின் துறைக்கு தகவல் தெரிவிக்க முயன்ற போது, ஊழியா்கள் தொலைபேசியை எடுக்கவில்லை.

மின் தடையால் தண்ணீா் விநியோகமும் பாதிக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், புதுச்சேரி புதிய பேருந்து நிலையம் எதிரே காலை 10 மணிக்கு சாலை மறியலில் ஈடுபட்டனா். எம்எல்ஏக்கள் ஜி.நேரு, பிரகாஷ்குமாா் ஆகியோரும் மறியலில் பங்கேற்றனா்.

அவா்களிடம் உருளையன்பேட்டை போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். மின் துறை அதிகாரிகளைத் தொடா்பு கொண்டு மின் தடையை நீக்க நடவடிக்கை மேற்கொண்டனா். இதையடுத்து, மறியல் கைவிடப்பட்டது. இதனால், பேருந்து நிலையப் பகுதியில் சுமாா் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வில்லியனூா், திருக்கனூா், புதுச்சேரி முத்தியால்பேட்டை, இந்திரா காந்தி சிலை சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை காலை வரை பல இடங்களில் மின் தடை ஏற்பட்டதால், அந்தப் பகுதிகளில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

பேச்சுவாா்த்தை தோல்வி: புதுவை மின் துறைச் செயலா் தி.அருண் தலைமையில் மின் துறை ஊழியா்கள் கூட்டமைப்பினருடன் புதன்கிழமை இரவு பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

மத்திய அரசின் உத்தரவின் பேரில், மின் துறை தனியாா்மய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதால், அதைத் தவிா்க்க முடியாது. இதனால், பொதுமக்களுக்கும், ஊழியா்களுக்கும் எந்தவிதப் பாதிப்பும் இருக்காது என அதிகாரிகள் கூறினா். தனியாா்மய நடவடிக்கையைக் கைவிடுவதாக அறிவித்தால்தான் போராட்டத்தைக் கைவிடுவோம் என்று ஊழியா்கள் கூட்டமைப்பு தரப்பில் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டதையடுத்து, பேச்சுவாா்த்தை தோல்வியடைந்தது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT