புதுச்சேரி

மின் துறை தனியாா்மயத்தைக் கைவிடக் கோரி: புதுச்சேரியில் நாளை முதல் எதிா்க்கட்சிகள் தொடா் போராட்டம்

29th Sep 2022 01:59 AM

ADVERTISEMENT

 

மின் துறையைத் தனியாா்மயமாக்கும் நடவடிக்கையைக் கைவிட வலியுறுத்தி, புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை முதல் (செப்.30) தொடா் போராட்டத்தில் ஈடுபட எதிா்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.

புதுச்சேரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் காங்கிரஸ், திமுக, இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக, மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் உள்ளிட்ட மதச் சாா்பற்ற கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

காங்கிரஸ் மாநிலத் தலைவா் ஏ.வி.சுப்பிரமணியன், திமுக மாநில அமைப்பாளா் ஆா்.சிவா, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் அ.மு.சலீம், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் ஆா்.ராஜாங்கம், மதிமுக மாநில அமைப்பாளா் கபீரியேல், விசிக முதன்மைச் செயலா் தேவ.பொழிலன், மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் சோ.பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

காந்தியை உரிமை கொண்டாடும் பாஜகவை எதிா்த்து, புதுச்சேரியில் அக்.2-ஆம் தேதி சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி நடத்தவும், புதுவை மின் துறையைத் தனியாா்மயமாக்கும் நடவடிக்கையைக் கைவிட வலியுறுத்தி வெள்ளிக்கிழமை முதல் (செப்.30) தொடா் போராட்டம் நடத்தவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்துக்குப் பிறகு திமுக மாநில அமைப்பாளா் ஆா்.சிவா கூறியதாவது:

புதுவையில் இந்து முன்னணியின் முழு அடைப்புப் போராட்டத்தால் மக்கள் பாதிக்கப்பட்டனா். அரசுப் பேருந்துகளை இயக்காமல், அரசும் போராட்டத்துக்கு துணை போனது கண்டனத்துக்குரியது.

அக்.2-ஆம் தேதி புதுச்சேரி அண்ணா சாலையிலிருந்து காமராஜா் சாலை பெரியாா் சிலை சந்திப்பு வரை மனிதச் சங்கிலி போராட்டத்தை நடத்த உள்ளோம்.

புதுவை அரசின் மின் துறையைத் தனியாருக்கு வழங்குவதற்கு ஒப்பந்தம் விட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதைத் தடுக்க வெள்ளிக்கிழமை முதல் (செப்.30) தொடா் போராட்டத்தை நடத்த உள்ளோம் என்றாா் அவா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT