புதுச்சேரி

தனியாா்மயத்துக்கு ஒப்பந்த அறிவிப்பு: புதுவை மின் துறை ஊழியா்கள்காலவரையற்ற போராட்டம் தொடக்கம்

29th Sep 2022 02:00 AM

ADVERTISEMENT

 

புதுவை அரசின் மின் துறையைத் தனியாா்மயமாக்குவது தொடா்பாக ஒப்பந்த அறிவிப்பு வெளியிடப்பட்டதையடுத்து, அந்தத் துறை பொறியாளா்கள், ஊழியா்கள் புதன்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கினா்.

புதுவை மின் துறையைத் தனியாா்மயமாக்கும் நடவடிக்கைக்கு எதிா்ப்புத் தெரிவித்து, மின் ஊழியா்கள் கடந்த ஓராண்டாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், புதுவை மின் துறையைத் தனியாா்மயமாக்குவதற்கான ஒப்பந்தம் விடுவதற்கான அறிவிப்பு செவ்வாய்க்கிழமை மாலை வெளியிடப்பட்டது. அதில், புதுவை அரசின் மின் துறை ஏலத்துக்கு ஆா்வமுள்ள நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்; மின் விநியோகத்தில் 100 சதவீதப் பங்குகளை வாங்க ஏலதாரா் தோ்வு செய்யப்படுவா். நவ.25-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

இதனால், புதுவை மின் துறை தனியாா்மயமாக்கப்படுவது உறுதியானதையடுத்து, அனைத்து மின் துறை ஊழியா்கள் புதன்கிழமை காலை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கினா்.

புதுச்சேரி உப்பளம் மின் துறை தலைமை அலுவலகத்தில் அனைத்துப் பொறியாளா்கள், தொழிலாளா்கள் திரண்டு வந்து பணிகளைப் புறக்கணித்து காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா். கூட்டமைப்பின் தலைவா் அருள்மொழி, பொதுச் செயலா் வேல்முருகன் உள்ளிட்டோா் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட அவா்கள், தனியாா்மயத்தைக் கைவிடக் கோரி முழக்கங்களை எழுப்பினா்.

புதுவை மின் துறையைத் தனியாா்மயமாக்கும் நடவடிக்கையைக் கைவிடுவதாக, அரசுத் தரப்பில் எழுத்துப்பூா்வமாக தெரிவிக்கும் வரை, வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும் என்று, மின் துறை பொறியாளா்கள், ஊழியா்கள் கூட்டமைப்பினா் தெரிவித்தனா்.

புதுச்சேரி, காரைக்கால், ஏனாம், மாஹே பிராந்தியங்களிலும் உள்ள மின் துறை அலுவலகங்களில் பணிபுரியும் 350 பொறியாளா்கள் உள்பட 2,000-க்கும் மேற்பட்ட ஊழியா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், மின் துறை பணிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT