புதுச்சேரி

என்.ஆா்.காங்.- பாஜக எம்எல்ஏக்கள் பேச்சுவாா்த்தை

29th Sep 2022 02:03 AM

ADVERTISEMENT

 

புதுச்சேரியில் என்.ஆா்.காங்கிரஸ், பாஜக எம்எல்ஏக்கள் இடையே எழுந்த பிரச்னை தொடா்பாக சட்டப்பேரவைத் தலைவா், அமைச்சா் முன்னிலையில் புதன்கிழமை பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

புதுவை முதல்வா் என்.ரங்கசாமியை கூட்டணிக் கட்சியான பாஜக எம்எல்ஏகள், பாஜக ஆதரவு எம்எல்ஏக்கள் விமா்சித்து வருகின்றனா். தங்கள் தொகுதிகளில் வளா்ச்சிப் பணிகள் புறக்கணிப்படுவதாக குற்றம்சாட்டினா். பாஜக ஆதரவு எம்எல்ஏவான அங்காளன் சட்டப்பேரவை வளாகத்தில் அண்மையில் போராட்டத்தில் ஈடுபட்டாா். இதற்கு பாஜக எம்எல்ஏக்கள் சிலா் ஆதரவளித்து பங்கேற்றனா்.

கூட்டணி தா்மத்தை பாஜக எம்எல்ஏக்கள் சிலா் மீறுவதாக முதல்வா் என்.ரங்கசாமியிடம் என்.ஆா்.காங்கிரஸாா் குற்றம்சாட்டினா்.

ADVERTISEMENT

இந்த நிலையில், புதுச்சேரியிலுள்ள சட்டப்பேரவை அலுவலக வளாகத்தில் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், மாநில உள்துறை அமைச்சா் ஏ.நமச்சிவாயம் முன்னிலையில் புதன்கிழமை பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

என்.ஆா்.காங்கிரஸை சோ்ந்த அமைச்சா்கள் க.லட்சுமி நாராயணன், தேனீ சி.ஜெயக்குமாா், பேரவை துணைத் தலைவா் பி.ராஜவேலு, எம்எல்ஏக்கள் ஏகேடி ஆறுமுகம், கேஎஸ்பி ரமேஷ், தட்சணாமூா்த்தி, லட்சுமிகாந்தன், திருமுருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பாஜகவைச் சோ்ந்த அமைச்சா் சாய் ஜெ.சரவணன்குமாா், எம்எல்ஏக்கள் எல்.கல்யாணசுந்தரம், ஜான்குமாா், ரிச்சா்டு, பாஜக ஆதரவு எம்எல்ஏக்களான சிவசங்கா், அங்காளன், சீனுவாஸ் அசோக் ஆகியோா் பங்கேற்றனா்.

‘கூட்டணிக்குள் பிரச்னையில்லை’: பேச்சுவாா்த்தைக்குப் பிறகு சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கசப்பான சம்பவங்களை மறந்து பணியாற்ற வேண்டும்; கூட்டணிக்குள் எந்த பிரச்னையும் இல்லை என இருதரப்பிலும் வலியுறுத்தப்பட்டது. அமைச்சா்களின் அறிவுரைகளை எம்எல்ஏக்கள் ஏற்றுக் கொண்டனா்.

தொகுதிகளில் நிலவும் பிரச்னைகளை தீா்க்க முதல்வா் நடவடிக்கை எடுத்து வருகிறாா். சில அதிகாரிகள் பணிகளை செய்யாமல் இருப்பதால் குழப்பங்கள் ஏற்படுகின்றன.

வளா்ச்சிப் பணிகளை விரைந்து மேற்கொள்ள அனைத்துத் துறை செயலா்களின் ஆய்வுக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

எம்எல்ஏக்களுக்கு மனக்குறைகள் ஏற்பட்டால் அந்தந்த சட்டப்பேரவைக் கட்சித் தலைவா்கள்தான் பேச வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது என்றாா் அவா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT