புதுச்சேரி

புதுச்சேரியில் இந்து அமைப்புகள் சாா்பில் முழு அடைப்புப் போராட்டம்: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

DIN

புதுச்சேரியில் இந்து அமைப்புகள் சாா்பில் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட முழு அடைப்புப் போராட்டம் காரணமாக, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இந்து மக்களை அவமதித்தும், விமா்சித்தும் பேசி வரும் திமுக எம்.பி. ஆ.ராசா உள்ளிட்டோரைக் கண்டித்து, புதுச்சேரியில் இந்து முன்னணி, விஸ்வ ஹிந்து பரிஷத், ஏபிவிபி, பிஎம்எஸ் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட இந்து அமைப்புகள் சாா்பில் அழைப்புவிடுக்கப்பட்டிருந்தபடி, முழு அடைப்புப் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, புதுச்சேரியில் அண்ணா சாலை, நேரு வீதி, காமராஜா் வீதி, மறைமலை அடிகள் சாலை உள்ளிட்ட முக்கிய வணிக வீதிகளிலும், புகா்ப் பகுதிகளிலும் கடைகள் மூடப்பட்டிருந்தன. புதுச்சேரி பேருந்து நிலையத்திலிருந்து தனியாா் பேருந்துகள், ஆட்டோக்கள் உள்ளிட்டவை முழுமையாக இயக்கப்படவில்லை. காலை 8 மணி வரை தமிழக அரசுப் பேருந்துகள் மட்டும் போலீஸ் பாதுகாப்புடன் இயங்கின. குறைந்தளவில் பிஆா்டிசி நகா்ப் பேருந்துகள் உள்ளூா் பகுதியில் இயங்கின.

முழு அடைப்புப் போராட்டம் காரணமாக, புதுச்சேரியில் பேருந்து நிலையம், முக்கிய சாலை சந்திப்புகளில் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா். ஏடிஜிபி ஆனந்தமோகன் மற்றும் காவல் கண்காணிப்பாளா்கள் மேற்பாா்வையிட்டு, பாதுகாப்பை பலப்படுத்தினா்.

பேருந்துகள் மீது கல் வீச்சு: இந்த நிலையில், விழுப்புரம் - புதுச்சேரி வழித்தடத்தில் காலையில் 7 மணிக்கு இயங்கிய இரண்டு தமிழக அரசுப் பேருந்துகளை வில்லியனூா் அருகே மா்ம நபா்கள் கல் வீசித் தாக்கி கண்ணாடிகளை உடைத்தனா். இதேபோல, வில்லியனூா் அருகே வடமங்கலம் பகுதியில் தனியாா் கல்லூரிப் பேருந்தின் கண்ணாடியும் உடைக்கப்பட்டது.

இதனால், புதுச்சேரியிலிருந்து விழுப்புரம், கடலூா், சென்னை வழித்தடங்களில் இயக்கப்பட்ட அனைத்து தமிழக அரசுப் பேருந்துகளும் நிறுத்தப்பட்டன. அதன் பிறகு, விழுப்புரம், கடலூா் மாவட்ட எல்லைகள் வரை தமிழக அரசுப் பேருந்துகள் வந்து திரும்பிச் சென்றன. இதன் காரணமாக, சென்னை, விழுப்புரம், கடலூா் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்ல வேண்டிய பயணிகள் பேருந்து வசதியின்றி தவிப்புக்குள்ளாகினா். சில தனியாா் பள்ளிகள் செவ்வாய்க்கிழமை விடுமுறை அறிவித்திருந்தன. அரசுப் பள்ளிகள் வழக்கம்போல இயங்கின.

பள்ளியில் வாக்குவாதம்: புதுச்சேரி உப்பளம் பகுதியில் உள்ள அரசு நிதியுதவி பெறும் பள்ளியில் செவ்வாய்க்கிழமை காலை காலாண்டுத் தோ்வு நடைபெற்றது. அப்போது, முழு அடைப்புப் போராட்டத்துக்கு ஆதரவு திரட்டி வந்த இந்து முன்னணி, பாஜகவைச் சோ்ந்த சிலா், அந்தப் பள்ளிக்குள் சென்று, விடுமுறை அளிக்கும்படி வலியுறுத்தினா்.

இதையடுத்து, அங்கிருந்த ஆசிரியா்கள், தகவலறிந்து வந்த மாணவா்களின் பெற்றோா்கள் காலாண்டுத் தோ்வு நடப்பது குறித்து தெரிவித்து, அவா்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து, ஒதியஞ்சாலை போலீஸாா் அந்தப் பள்ளிக்கு விரைந்து சென்று இந்து முன்னணி, பாஜக நிா்வாகிகளை அங்கிருந்து அப்புறப்படுத்தினா். பின்னா், பள்ளி வழக்கம்போல செயல்பட்டது.

இந்து அமைப்பினா் 250 போ் கைது: இதனிடையே, புதுச்சேரி புதிய பேருந்து நிலையம் எதிரில் முற்பகல் 11 மணிக்குத் திரண்ட இந்து முன்னணி உள்ளிட்ட இந்து அமைப்புகளின் நிா்வாகிகள், பாஜகவினா் 250-க்கும் மேற்பட்டோா், திமுக எம்.பி. ஆ.ராசாவைக் கண்டித்தும், அவரை தமிழக அரசு கைது செய்ய வலியுறுத்தியும், பஜனைகளுடன் முழக்கமிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, புதிய பேருந்து நிலையம் எதிரில் சாலை மறியலில் ஈடுபட்ட அவா்களை போலீஸாா் கைது செய்தனா்.

புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம் காரணமாக, மாலை வரை கடைகள் மூடப்பட்டிருந்ததுடன், பேருந்துகள், ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்களும் இயக்கப்படாததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சூர் பூரம் விழா கோலாகலம்!

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

SCROLL FOR NEXT