புதுச்சேரி

மின்துறை தனியார்மயம்: புதுவை ஊழியர்கள் வேலை நிறுத்தம் தொடக்கம்

28th Sep 2022 12:01 PM

ADVERTISEMENT

புதுச்சேரி: புதுவை மின்துறை தனியார் மயத்துக்கான ஒப்பந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதால், அத்துறை ஊழியர்கள் புதன்கிழமை முதல் பணிகளை புறக்கணித்து காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தைத் துவக்கியுள்ளனர்.

புதுவை அரசின் மின்துறையை தனியார் மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை மத்திய அரசு கடந்தாண்டு தொடங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மின்துறை தனியார் மயமாக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியும் புதுச்சேரி மின்துறை பொறியாளர்கள், ஊழியர்கள் கூட்டமைப்பினர் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர்.

இதற்கிடையே புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ், பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமைந்த பிறகு, கடந்த அமைச்சரவை கூட்டத்தில் மின்துறையை தனியார் மயமாக்குவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. அப்போது, தனியார் மயம் தொடர்பான வரைவு அறிக்கை அரசிடம் தாக்கல் செய்யப்பட்டது. இதனால் கடந்த பிப்ரவரி மாதம் மின் துறை ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். முதல்வர் ரங்கசாமி, மின் துறை ஊழியர்கள் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, அனைத்து தரப்பினரிடம் கருத்து கேட்டு முடிவு எடுக்கப்படும் என கூறியதால், போராட்டம் கைவிடப்பட்டது.

இதையும் படிக்க | ‘ஆப்’ மூலம் 2-வது திருமணம்: முதலிரவன்றே பணம், நகையுடன் மாயமான பெண்

இந்த நிலையில், மின்துறை தனியார் மயத்திற்கான ஒப்பந்த அறிவிப்பு செவ்வாய்க்கிழமை மாலை வெளியிடப்பட்டுள்ளது. அதில், 'புதுச்சேரி அரசு மின்துறை ஏலத்திற்கு ஆர்வமுள்ள நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என்றும், விநியோகத்தில் 100 சதவீத பங்குகளை வாங்க ஏலதாரர் தேர்வு செய்யப்படுவார்கள். முன்மொழிவுக்கு ஏலதாரர்கள் ரூ. 5 லட்சத்து 90 ஆயிரம் செலுத்தவேண்டும். ஏலம் எடுக்கும் நிறுவனத்தின் வங்கி செக்யூரிட்டியாக ரூ.27 கோடி வங்கி கணக்கில் இருக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் நவம்பர் 25-ம் தேதி மாலை 4 மணி ஆகும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதனால், புதுவை மின்துறை தனியார்மயமாவது உறுதியாகி உள்ளதால் அதிர்ச்சியடைந்த மின்துறை ஊழியர்கள் புதன்கிழமை காலை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.

புதுச்சேரி உப்பளம் மின் துறை தலைமை அலுவலகத்தில் அனைத்து பொறியாளர்களும், தொழிலாளர்களும் திரண்டு வந்து பணிகளை புறக்கணித்து காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர்.

புதுவை மின்துறை தனியார்மயத்தை கைவிட கோரியும், பொய் வாக்குறுதி கொடுத்த மின்துறை அமைச்சரைக் கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.

புதுவை மின்துறை தனியார் நடவடிக்கையை கைவிடுவதாக அரசு தரப்பில் எழுத்து பூர்வமாக தெரிவிக்கும் வரை வேலை நிறுத்த போராட்டம் தொடரும் என்று மின்துறை பொறியாளர், ஊழியர்கள் கூட்டமைப்பினை தெரிவித்தனர்.

புதுச்சேரி, காரைக்கால், ஏனாம், மாகி பிராந்தியத்தில் உள்ள 2000 ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், மின்துறை பணிகள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT