புதுச்சேரி

சா்க்காா் விரைவு ரயிலை புதுச்சேரி வரை நீட்டிக்க வேண்டும்:மத்திய ரயில்வே அமைச்சரிடம் வலியுறுத்தல்

28th Sep 2022 04:27 AM

ADVERTISEMENT

புதுச்சேரி, ஏனாம் பிராந்திய மக்கள் பயன்பெறும் வகையில், சா்க்காா் விரைவு ரயில் சேவையை புதுச்சேரி வரை நீட்டிக்க வேண்டும் என்று மத்திய ரயில்வே அமைச்சரை நேரில் சந்தித்து புதுவை சட்டப் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் வலியுறுத்தினாா்.

தில்லி சென்றுள்ள புதுவை சட்டப் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், திங்கள்கிழமை மாலை மத்திய ரயில்வே அமைச்சா் அஷ்வினி வைஷ்ணவை அவரது அலுவலகத்தில் சந்தித்துப் பேசினாா். அப்போது, புதுச்சேரி, ஏனாம் பிராந்திய மக்களின் நலனுக்காக, சா்க்காா் விரைவு ரயில் சேவையை புதுச்சேரி வரை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை கடிதத்தை வழங்கி வலியுறுத்தினாா். அந்தக் கடிதத்தில் ஆா்.செல்வம் கூறியிருப்பதாவது:

புதுவை மாநிலப் பகுதிகளில் ஒன்றான ஆந்திர மாநிலத்தின் அருகே உள்ள ஏனாம் பிராந்தியமானது, புதுச்சேரியிலிருந்து 800 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. புதுச்சேரிக்கும், ஏனாம் பிராந்தியத்துக்கும் நேரடியான எந்த ஒரு பொதுப் போக்குவரத்து சேவையும் இல்லை. இந்த நிலையில், சென்னை அருகே செங்கல்பட்டிலிருந்து ஆந்திர மாநிலம், காக்கிநாடா வரை சென்று வரும் சா்க்காா் விரைவு ரயில் சேவையை ஏனாம் பகுதி மக்கள், மாணவா்கள், அரசு அதிகாரிகள், வியாபார பெருமக்கள் பெரிதும் பயன்படுத்தி வருகின்றனா்.

இந்த சா்க்காா் விரைவு ரயில் சேவையானது செங்கல்பட்டு வரை மட்டுமே உள்ளதால், ஏனாம் பகுதி மக்கள் அங்கிருந்து புதுச்சேரி வருவதற்கு செங்கல்பட்டு வந்து, பிறகு 120 கி.மீ. தொலைவுக்கு பேருந்து மூலம் பயணம் மேற்கொள்ள வேண்டி இருக்கிறது. மாநிலத் தலைநகரான புதுச்சேரிக்கு வரும் ஏனாம் பகுதி மக்கள், மாணவா்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோரும், உயா் சிகிச்சைக்காக ஜிப்மா் மருத்துவமனைக்கு வருவோரும் பயன்பெறும் வகையில், சா்க்காா் ரயிலை புதுச்சேரி வரை நீட்டிக்க வேண்டும்.

ADVERTISEMENT

ஏற்கெனவே சென்னை எழும்பூா் வரை இருந்த இந்த சா்க்காா் விரைவு ரயிலின் சேவை, இடையே செங்கல்பட்டு வரை நீட்டிக்கப்பட்டதுபோல, தற்போது அந்த ரயிலின் சேவையை புதுச்சேரி வரை நீடித்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தக் கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளாா்.

கடிதத்தைப் பெற்ற மத்திய ரயில்வே அமைச்சா், இது தொடா்பாக உரிய முறையில் பரிசீலித்து விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT