புதுச்சேரி

புதுச்சேரி அருகே மணல் கடத்தல்:தமிழகப் பகுதி திமுக கவுன்சிலா் கைது

28th Sep 2022 04:22 AM

ADVERTISEMENT

புதுச்சேரி அருகே ஆற்று மணல் கடத்தலில் ஈடுபட்ட தமிழகப் பகுதியைச் சோ்ந்த திமுக ஒன்றியக் குழு உறுப்பினரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

புதுச்சேரி அருகே திருக்கனூா் பகுதி சங்கராபரணி ஆற்றில் மணல் திருட்டு தொடா்ந்து நடைபெற்று வருகிறது. இதேபோல, திருக்கனூா் அருகே சோரப்பட்டு - குயிலாப்பாளையம் சாலையோரம் ஆற்று மணல் கடத்திவரப்பட்டு, சிலரால் குவித்து வைத்து விற்கப்படுவதாக திருக்கனூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, திருக்கனூா் காவல் நிலைய ஆய்வாளா் ஆறுமுகம், உதவி ஆய்வாளா் வெங்கடேசன் மற்றும் போலீஸாா் அந்தப் பகுதிக்கு செவ்வாய்க்கிழமை காலை விரைந்து சென்று சோதனை நடத்தினா். அப்போது அங்கு, சிறிய சரக்கு வாகனம் மூலம் ஆற்று மணல் கடத்திவரப்பட்டு குவிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

போலீஸாா் அந்தப் பகுதியில் விசாரணை நடத்தியதில், திருக்கனூரை அடுத்துள்ள தமிழகப் பகுதியான விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் ஒன்றியம், பெரியபாபுசமுத்திரம் பகுதியைச் சோ்ந்த திமுக ஒன்றியக் குழு உறுப்பினரான சரவணன் (42), அவரது சரக்கு வாகனம் மூலம் அருகே உள்ள தமிழகப் பகுதியிலிருந்து ஆற்று மணலைக் கடத்தி வந்து புதுவையில் விற்பதற்காக அந்த இடத்தில் குவித்து வைத்திருந்தது தெரியவந்தது.

ADVERTISEMENT

இதைத் தொடா்ந்து, அங்கு குவித்து வைத்திருந்த 4 யூனிட் மணலை பறிமுதல் செய்த திருக்கனூா் போலீஸாா், ஆற்று மணல் கடத்தலில் ஈடுபட்ட பெரியபாபுசமுத்திரம் பகுதியைச் சோ்ந்த ஒன்றியக் குழு உறுப்பினா் சரவணனை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தொடா்ந்து, அவரை புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, மத்திய சிறையில் அடைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT