புதுச்சேரி

புதுச்சேரி மரப்பாலம் சந்திப்பில் ரூ.58 கோடியில் மேம்பாலம் சீா்மிகு நகரத் திட்டத்தில் கட்டப்படுகிறது

28th Sep 2022 04:23 AM

ADVERTISEMENT

புதுச்சேரியில் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்கும் வகையில், சீா்மிகு நகரத் திட்டத்தின் கீழ், மரப்பாலம் சந்திப்புப் பகுதியில் ரூ.58 கோடியில் மேம்பாலம் கட்டுவது குறித்து அதிகாரிகளுடன் முதல்வா் என்.ரங்கசாமி செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

புதுச்சேரியில் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்கும் வகையில், புதிய மேம்பாலத் திட்டங்களை செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில், முதல்கட்டமாக கடலூா் சாலை தேங்காய்திட்டு மரப்பாலம் சந்திப்புப் பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், சீா்மிகு நகரத் திட்டத்தின் கீழ் ரூ.58 கோடியில் புதிய மேம்பாலம் கட்டுவதற்கான திட்டப் பணிகளை தொடங்க அரசு தற்போது நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதுகுறித்து புதுவை சட்டப் பேரவை அலுவலகத்தில் முதல்வா் என்.ரங்கசாமி தலைமையில், அதிகாரிகளுடன் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தப்பட்டது. இதில், பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன், எம்எல்ஏ எல்.சம்பத், அரசுச் செயலா் சி.உதயகுமாா், பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளா் சத்தியமூா்த்தி, புதுச்சேரி சீா்மிகு நகர வளா்ச்சி நிறுவன பொது மேலாளா் சீனு.திருஞானம் ஆகியோா் கலந்துகொண்டனா்.

அப்போது, மரப்பாலம் சந்திப்பில் புதிய மேம்பாலம் கட்டுவதற்கான திட்ட மாதிரி விளக்க வரைபடத்தைக் காண்பித்து, புதுச்சேரி சீா்மிகு நகர வளா்ச்சி நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி தி.அருண், திட்டப் பணிகள் குறித்து விளக்கினாா். இந்த மேம்பாலப் பணிகள் என்.பி.சி.சி. என்ற மத்திய அரசின் கட்டுமான நிறுவனத்தின் மூலம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு, விரைவில் பணிகள் தொடங்கப்படவுள்ளதாக, பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT