புதுச்சேரி

கூட்டணி தா்மத்தை மீறுகிறது பாஜக:என்.ஆா்.காங். எம்எல்ஏக்கள் புகாா்

27th Sep 2022 04:23 AM

ADVERTISEMENT

 

புதுவையில் பாஜக, பாஜக ஆதரவு எம்எல்ஏக்கள் கூட்டணி தா்மத்தை மீறி அரசுக்கு எதிராக செயல்படுவது சரியல்ல என்று, முதல்வா் என்.ரங்கசாமியிடம் என்.ஆா்.காங்கிரஸ் எம்எல்ஏக்கள் புகாா் தெரிவித்தனா்.

புதுவை சட்டப்பேரவை அலுவலகத்தில் என்.ஆா்.காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் அரசு கொறடா ஏ.கே.டி. ஆறுமுகம் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

அமைச்சா் க.லட்சுமி நாராயணன், சட்டப்பேரவை துணைத் தலைவா் பி.ராஜவேலு, எம்எல்ஏக்கள் திருமுருகன், உ.லட்சுமிகாந்தன், பாஸ்கா் ஆகியோா் பங்கேற்றனா். உடல்நிலை சரியில்லாததால் அமைச்சா் தேனீ சி.ஜெயக்குமாரும், காரைக்காலில் உள்ள அமைச்சா் சந்திர பிரியாங்காவும் கலந்து கொள்ளவில்லை.

ADVERTISEMENT

கூட்டத்துக்குப் பிறகு, முதல்வா் என்.ரங்கசாமியை அவா்கள் சந்தித்துப் பேசினா். கூட்டணியில் உள்ள பாஜக, பாஜக ஆதரவு எம்எல்ஏக்கள் தொடா்ந்து கூட்டணி தா்மத்தை மீறி முதல்வரை விமா்சிப்பதும், அரசுக்கு எதிராகச் செயல்படுவதும் சரியானதாக இல்லை. இதுதொடா்பாக கண்டனத்தைப் பதிவு செய்ய வேண்டுமென வலியுறுத்தினா். இதைக் கேட்ட முதல்வா், எதுவும் தேவையில்லை என சமாதானப்படுத்தி அனுப்பினாா்.

இதுகுறித்து அரசு கொறடா ஏ.கே.டி.ஆறுமுகம் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கூட்டணியில் இருந்து கொண்டு முதல்வா் என்.ரங்கசாமி மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனா். நான்கு முறை முதல்வராக இருந்தவரை அவமதிப்பது சரியல்ல. சட்டப்பேரவை வளாகத்தில் சுயேச்சை எம்எல்ஏ போராட்டம் நடத்த எப்படி அனுமதியளித்தனா். இதுகுறித்து சட்டப்பேரவைத் தலைவா், அமைச்சா்கள் மற்றும் பாஜக எம்எல்ஏக்களை அழைத்து பேச உள்ளோம். தன்மானத்தை ஒருபோதும் விட்டுத் தர மாட்டோம். கூட்டணி தா்மத்தை மீறிய செயலை ஏற்க முடியாது என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT