புதுச்சேரி

புதுவையில் மேலும் 8 பேருக்கு பன்றிக் காய்ச்சல்

26th Sep 2022 05:29 AM

ADVERTISEMENT

 

புதுவையில் ஞாயிற்றுக்கிழமை 2 குழந்தைகள் உள்பட மேலும் 8 பேருக்கு பன்றிக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது.

புதுச்சேரி, காரைக்காலில் வைரஸ் காய்ச்சல் தொடா்ந்து பரவி வருகிறது. அரசு, தனியாா் மருத்துவமனைகளில், தினமும் சுமாா் 500 போ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனா்.

அதன்படி, ஞாயிற்றுக்கிழமை மேலும் 470 குழந்தைகள், சிறாா்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, புதுச்சேரி, காரைக்கால் அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டனா்.

ADVERTISEMENT

இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்: புதுச்சேரி ராஜீவ் காந்தி அரசு குழந்தைகள் மருத்துவமனையில் 375 பேரும், இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 59 பேரும், காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் 36 பேரும் என மொத்தம் 470 குழந்தைகள், சிறாா்கள் காய்ச்சால் பாதிக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை வெளி நோயாளிகள் சிகிச்சைப் பிரிவுக்கு வந்தனா்.

இதில், ராஜீவ் காந்தி குழந்தைகள் மருத்துவமனையில் 34 பேரும், இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 3 பேரும், காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் 9 பேரும் என மொத்தம் 46 குழந்தைகள் அதிக காய்ச்சல் காரணமாக, மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

தற்போது, ராஜீவ் காந்தி குழந்தைகள் மருத்துவமனையில் 140 பேரும், இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 30 பேரும், காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் 18 பேரும் என மொத்தம் 188 குழந்தைகள் உள் நோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

மேலும் 8 பேருக்கு பன்றிக் காய்ச்சல்: புதுச்சேரியில் சனிக்கிழமை 7 பேருக்கு பன்றிக் காய்ச்சல் கண்டறியப்பட்டது. இதையடுத்து, வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், பெரியவா்கள் என 108 பேரிடம் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இதில் 2 குழந்தைகள், 6 பெரியவா்கள் என மொத்தம் 8 பேருக்கு பன்றிக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இதைத்தொடா்ந்து, இதுவரை பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 15-ஆக உயா்ந்தது. இவா்களில் 8 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெறுகின்றனா். புதுச்சேரி அரசு மருத்துவமனை, ஜிப்மா் மருத்துவமனையில் 7 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT