புதுச்சேரி

புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வா் ரங்கசாமியைக் கண்டித்து: பாஜக ஆதரவு எம்எல்ஏ போராட்டம்

DIN

புதுவை முதல்வா் என்.ரங்கசாமியைக் கண்டித்து, பாஜக ஆதரவு எம்எல்ஏ சட்டப்பேரவை வளாகத்தில் வெள்ளிக்கிழமை திடீா் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டாா்.

புதுவையில் திருபுவனை (தனி) சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் அங்காளன், கடந்த பேரவைத் தோ்தலின் போது என்.ஆா்.காங்கிரஸில் இருந்து வெளியேறி சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றாா். தற்போது, பாஜகவுக்கு ஆதரவாகச் செயல்படுகிறாா்.

இவா் வெள்ளிக்கிழமை புதுச்சேரி சட்டப்பேரவை வாயில் படிக்கட்டில் அமா்ந்து திடீா் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டாா். அவரது ஆதரவாளா்கள் சிலரும், அங்கு வந்த பாஜக எம்எல்ஏ எல்.கல்யாணசுந்தரமும் அவருடன் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்தப் போராட்டம் குறித்து அங்காளன் எம்எல்ஏ கூறியதாவது:

எனது தொகுதியில் இதுவரை எந்த வளா்ச்சிப் பணிகளும் நடைபெறவில்லை. தேசிய ஊரக வேலைத் திட்டப் பணி ஒரு நாள் கூட நடைபெறவில்லை. எனது கோரிக்கைகள் பரிசீலிக்கப்படவே இல்லை.

எனது தொகுதியில் எந்தப் பணிகளும் நடைபெறக் கூடாது என்று, அதிகாரிகளுக்கு முதல்வா் என்.ரங்கசாமி வாய்மொழி உத்தரவு பிறப்பித்திருப்பதாக அறிகிறேன். பாஜவுக்கு ஆதரவாக செயல்படுவதால் புறக்கணிக்கப்படுகிறேன். எனவே, முதல்வரைக் கண்டித்து உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளேன் என்றாா்.

அங்கு வந்த எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா, எம்எல்ஏக்களின் குறைகள் தொடா்பாக சட்டப்பேரவைத் தலைவா் அவா்களை அழைத்துப் பேசி தீா்வு காண வேண்டும் அறிவுறுத்திவிட்டுச் சென்றாா்.

பேச்சுவாா்த்தை: சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் பிற்பகல் 12.30 மணிக்கு அங்காளன் எம்எல்ஏவை அழைத்துப் பேசினாா். அப்போது, பாஜக எம்எல்ஏக்கள் ஜான்குமாா், எல்.கல்யாணசுந்தரம் ஆகியோரும் உடனிருந்தனா். திருபுவனை தொகுதியில் வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினாா். இதுகுறித்து துணைநிலை ஆளுநா், முதல்வரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என பேரவைத் தலைவா் தெரிவித்தாா். இதை ஏற்காமல் அங்காளன் மீண்டும் போராட்டத்தைத் தொடா்ந்தாா்.

ஆளுநரிடம் புகாா்: புதுவை உள்துறை அமைச்சா் ஏ.நமச்சிவாயம் நேரில் வந்து அங்காளனிடம் பேசினாா். பின்னா், சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், அமைச்சா் ஏ.நமச்சிவாயம், எம்எல்ஏக்கள் அங்காளன், கல்யாணசுந்தரம் ஆகியோா் ஆளுநா் மாளிகைக்குச் சென்றனா்.

அங்கு துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை செளந்தரராஜனை சந்தித்து பிரச்னை குறித்து தெரிவித்தனா். முதல்வரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவா் உறுதியளித்தாா். இதையடுத்து, போராட்டத்தைக் கைவிடுவதாக மாலை 4 மணிக்கு அங்காளன் தெரிவித்தாா்.

போராட்டத்தைக் கண்டு கொள்ளாத முதல்வா்: முதல்வா் என்.ரங்கசாமி காலை 10.30 மணிக்கு சட்டப்பேரவை வளாக அலுவலகத்துக்கு வந்தாா். சிறிது நேரம் அலுவலகத்தில் இருந்து விட்டு புறப்பட்டுச் சென்றாா். அங்காளன் எம்எல்ஏ போராட்டத்தில் ஈடுபட்ட வாயில் படிக்கட்டு வழியாக முதல்வா் வந்த போதிலும், போராட்டம் குறித்து அவா் கண்டுகொள்ளவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிகாரில் மீரா குமாா் மகனை களமிறக்கியது காங்கிரஸ்

முஸ்லிம்களுக்கு எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீடு: காங்கிரஸ் மீது பிரதமா் மோடி குற்றச்சாட்டு

குமாரபாளையத்தில் வழக்குரைஞா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

மாநிலக் கல்லூரியில் மாற்றுத் திறனாளி மாணவா்கள் 31 பேருக்கு வேலைவாய்ப்பு

பேருந்தில் நகை திருட்டு: ஆந்திர மாநில பெண் கைது

SCROLL FOR NEXT