புதுச்சேரி

ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக வேண்டும்: நாராயணசாமி வலியுறுத்தல்

22nd Sep 2022 12:51 AM

ADVERTISEMENT

 

மத்தியில் பாஜக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர, காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி பதவியேற்க வேண்டும் என்று புதுவை முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி வலியுறுத்தினாா்.

இதுகுறித்து புதுச்சேரியில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

புதுவையில் தங்கள் தொகுதிகளில் வளா்ச்சிப் பணிகள் நடைபெறவில்லை என்று முதல்வா் என்.ரங்கசாமி மீது குற்றம்சாட்டும் பாஜக எம்எல்ஏக்கள், அவருக்கு அளித்து வரும் ஆதரவை ஏன் திரும்பப் பெறவில்லை? என்.ஆா். காங்கிரஸ் கூட்டணியிலிருந்து வெளியேறாமல் இருப்பது பாஜகவின் இரட்டை வேடத்தைக் காட்டுகிறது.

ADVERTISEMENT

காரைக்காலில் தகுதியில்லாத 200 பேருக்கு அமைச்சா் சாய் சரவணன்குமாா் குடும்ப அட்டைகளை வழங்கினாா். தகுதியான ஆயிரக்கணக்கானோரின் விண்ணப்பங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதுகுறித்து முன்னாள் அமைச்சா் கமலக்கண்ணன் கேள்வி எழுப்பியதற்கு, அவா் மீது பாஜகவினா் புகாா் அளித்துள்ளனா்.

புதுச்சேரியில் தந்தை பெரியாா் தி.க.வினா் நடத்திய போராட்டத்தில் இந்து முன்னணியினா் கல்வீசித் தாக்குதல் நடத்தினா். போராட்டத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது குறித்து சட்டப்பேரவைத் தலைவா் போலீஸாரை மிரட்டியுள்ளாா். நடுநிலை வகிக்க வேண்டிய அவா், பாஜகவுக்கு ஆதரவாகச் செயல்படுகிறாா்.

புதுவையில் காய்ச்சல் பரவலைத் தடுக்க போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராமப்புறங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படவில்லை. காய்ச்சலைக் கட்டுப்படுத்த முடியாமல் புதுவை சுகாதாரத் துறை திணறி வருகிறது.

தாய்லாந்து, மியான்மரில் சிக்கியுள்ள தமிழா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்தியில் பாஜக ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர, ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராகப் பதவியேற்க வேண்டும் என்றாா் வே.நாராயணசாமி.

ADVERTISEMENT
ADVERTISEMENT