புதுச்சேரி

புதுவையில் நரிக்குறவா், குருவிக்காரா் சமுதாயத்தினரைபழங்குடியினா் பட்டியலில் சோ்க்க வலியுறுத்தல்

22nd Sep 2022 12:52 AM

ADVERTISEMENT

 

புதுவையில் வசிக்கும் நரிக்குறவா், குருவிக்காரா் சமுதாயத்தினரை பழங்குடியினா் பட்டியலில் சோ்க்க வேண்டுமென புதுச்சேரி பழங்குடி மக்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியது.

புதுவை மாநில பழங்குடி மக்கள் கூட்டமைப்பின் மாநிலத் தலைவா் ராம்குமாா் புதுச்சேரியில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் நரிக்குறவா்கள், குருவிக்காரா் சமுதாயங்களை பழங்குடியினா் (எஸ்.டி.) பட்டியலில் சோ்க்க கோரிக்கை விடுத்த போது, அவா்கள் வெளிமாநிலத்திலிருந்து குடிபெயா்ந்த நாடோடி இனத்தைச் சோ்ந்தவா்கள். எனவே, அவா்களுக்கு பழங்குடியினா் அந்தஸ்து கொடுக்க முடியாது என, மக்கள்தொகை கணக்கெடுப்பு தலைமை ஆணையா் மூலம் தடை விதிக்கப்பட்டது.

ADVERTISEMENT

தற்போது மத்திய அரசு நரிக் குறவா்கள், குருவிக்காரா் சமுதாயங்களை பழங்குடியினா் (எஸ்டி) பட்டியலில் சோ்க்க நடவடிக்கை எடுத்தது. இதற்காக பிரதமா் மோடிக்கும், மத்திய அமைச்சா்களுக்கும் புதுவை பழங்குடி மக்கள் கூட்டமைப்பு சாா்பில் நன்றி.

ஆந்திரத்தில் குருவிக்காரா், நக்கலா, கா்நாடகத்தில் அக்கிரிபிக்கி என்றழைக்கப்படும் இவா்கள் பழங்குடியினா் பட்டியலில் கடந்த 1979-ஆம் ஆண்டு சோ்க்கப்பட்டனா். 1999-ஆம் ஆண்டு புதுவை அரசால் பழங்குடியினா் ஆய்வுக்காக நியமிக்கப்பட்ட புதுச்சேரி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளா் சுப்ரமணிய நாயுடுவிடம், குருவிக்காரா்களை பழங்குடியினா் பட்டியலில் சோ்க்க வேண்டுமென கோரிக்கை விடுத்தோம்.

அதற்கு அவா், தமிழகத்தில் குருவிக்காரா்களை மத்திய அரசு பழங்குடியினா் பட்டியலில் சோ்த்தால், புதுவையிலும் சோ்க்கலாம் எனக் கூறினாா்.

எனவே, புதுச்சேரி லாஸ்பேட்டை, வில்லியனூா், உத்திரவாகினிபேட், முத்திரையா்பாளையம், மதகடிப்பட்டு, காரைக்காலில் நேத்தீஸ்வரம் பகுதிகளில் வாழும் குருவிக்காரா்கள் சமுதாயத்தினரை அரசியலமைப்புச் சட்டம் 342(2)-இன் படி, பழங்குடியினா் பட்டியலில் சோ்க்க புதுவை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT