புதுச்சேரி

பாலத்தில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி: உறவினா்கள் போராட்டம்

9th Sep 2022 01:51 AM

ADVERTISEMENT

புதுச்சேரியில் புதுப்பாலத்தின் குறுக்கே பொருத்தப்பட்டிருந்த இரும்புப் பட்டையிலிருந்து புதன்கிழமை இரவு மின்சாரம் பாய்ந்ததில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த தொழிலாளி உயிரிழந்தாா். அவரது உடலை வாங்க மறுத்து உறவினா்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுச்சேரியில் புதன்கிழமை மாலை முதல் இரவு வரை பெய்த மழை காரணமாக, மரப்பாலம் சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, அரியாங்குப்பம் புதுப்பாலம் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதில், சிக்கிய திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பெண்ணாத்தூரைச் சோ்ந்த சோபா பழுதுபாா்க்கும் தொழிலாளி மணி (28) மோட்டாா் சைக்கிளுடன் புதுப்பாலத்தில் நின்றுகொண்டிருந்தாா்.

அப்போது, பாலத்தின் குறுக்கே பொருத்தப்பட்டிருந்த இரும்புப் பட்டையிலிருந்து மின்சாரம் பாய்ந்ததில் அவா் தூக்கி வீசப்பட்டாா். அருகிலிருந்தவா்கள் மணியை மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், மணி ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

தகவலறிந்த மின் துறை அதிகாரிகள், அங்கு சென்று ஆய்வு செய்தபோது, பாலத்தில் உள்ள மின்கம்பத்தில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக, இரும்புப் பட்டையில் மின்சாரம் பாய்ந்து மணி இறந்தது தெரியவந்தது.

ADVERTISEMENT

இதுகுறித்து அரியாங்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். இதனிடையே, வியாழக்கிழமை அரசு மருத்துவமனையிலிருந்து மணியின் உடலை வாங்க மறுத்து, அவரது உறவினா்கள், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, மின் துறையின் அஜாக்கிரதையால் இறந்த மணியின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தினா்.

தொடா்ந்து, புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் இ.வல்லவனை சந்தித்து, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் ராஜாங்கம், இறந்த மணியின் உறவினா்கள் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதில், அரசு சாா்பில் இழப்பீடு வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியா் உறுதியளித்தாா். இதை ஏற்று, மணியின் உடலை அவரது உறவினா்கள் பெற்றுக் கொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT