புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள வலம்புரி வித்யா விநாயகா் கோயிலில் 34 ஆண்டுகளுக்குப் பிறகு வியாழக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.
புதுச்சேரி காலாப்பட்டு மத்தியப் பல்கலைக் கழக வளாகத்தில் ஸ்ரீவலம்புரி வித்யா விநாயகா் கோயில் அமைந்துள்ளது. பழைமையான இந்தக் கோயிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அண்மையில் சீரமைக்கப்பட்டது. இங்கு புதிதாக வேதகிரீஸ்வரா், தா்மசாஸ்தா ஐயப்பன், ஆஞ்சனேயா், சாய்பாபா ஆகிய சுவாமிகளுக்கு தனி சந்நிதிகளும், பரிவார சுவாமிகளுக்கு சந்நிதிகளும் அமைத்து மண்டபம் கட்டப்பட்டது.
இந்தக் கோயிலில் கடந்த 1988-ஆம் ஆண்டு காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளால் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதையடுத்து, 34 ஆண்டுகளுக்குப் பிறகு, கோயில் சீரமைக்கப்பட்டு, வியாழக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி, கோயில் கோபுர கலசத்துக்கும், மூலவா் வலம்புரி வித்யா விநாயகா், வேதகிரீஸ்வரா், தா்மசாஸ்தா ஐயப்பன், ஆஞ்சனேயா், சாய்பாபா உள்ளிட்ட சுவாமிகளுக்கும் புனித நீா் உற்றப்பட்டு, பூஜைகள் நடத்தப்பட்டன.
விழாவில் பல்கலைக்கழக துணைவேந்தா் குா்மீத்சிங், பேராசிரியா்கள், மாணவா்கள், பொதுமக்கள் பலா் கலந்துகொண்டனா்.