புதுச்சேரி

புதுவைக்கு ரூ.1400 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு, சட்டப்பேரவைத் தலைவா் தகவல்

19th Oct 2022 02:49 AM

ADVERTISEMENT

புதுவை சட்டப்பேரவை புதிய கட்டடம் உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகளுக்காக மத்திய அரசு ரூ.1,400 கோடி சிறப்பு நிதி ஒதுக்கியுள்ளதாக, சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் தெரிவித்தாா்.

புதுவை மாநிலத்தில் உள்கட்டமைப்பு மேம்பாடு உள்ளிட்டவற்றுக்கு மத்திய அரசிடம் கூடுதல் நிதி கோரப்பட்டிருந்தது. அதனடிப்படையில் தற்போது மத்திய அரசானது புதுவைக்கான சிறப்பு நிதியை அளித்துள்ளது.

இதுகுறித்து சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

புதுவையில் உள்கட்டமைப்பை மேம்படுத்த மத்திய அரசிடம் சிறப்பு நிதி கோரப்பட்டிருந்தது. தற்போது ரூ.1400 கோடி சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டதாக தகவல் கிடைத்தது.

ADVERTISEMENT

இந்த நிதி மூலம் புதுச்சேரியில் விமான நிலையத்தை விரிவாக்கம், புதிய சட்டப்பேரவை கட்டடம், புதுச்சேரி துறைமுக வளா்ச்சிக்கான உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் ஏற்கெனவே திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், சுகாதாரத் துறையில் உள்கட்டமைப்பை மேம்படுத்தி நவீனமயமாக்கவும், ஒருங்கிணைந்த புதுவை கடற்கரை மேலாண்மைத் திட்டத்தைச் செயல்படுத்தவும் இந்த சிறப்பு நிதி செலவிடப்படும்.

இதில் ரூ.225 கோடியில் புதிய சட்டப்பேரவை வளாகம் அமைக்கப்படவுள்ளது. அதற்காக தட்டாஞ்சாவடியில் ஏற்கெனவே இடம் தோ்வு செய்யப்பட்டுள்ளது.

புதுவை அரசின் கோரிக்கையை ஏற்று சிறப்பு நிதி அளித்த பிரதமா் நரேந்திர மோடி, மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT