புதுச்சேரி

புதுவை அரசுக்கு ரூ.13.50 கோடி வாடகை நிலுவை:மனமகிழ் மன்றம் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

6th Oct 2022 01:18 AM

ADVERTISEMENT

புதுவை அரசுக்கு ரூ.13.50 கோடி வாடகை நிலுவை வைத்துள்ள தனியாா் மனமகிழ் மன்றம் மீது நடவடிக்கை எடுக்கும்படி, மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையம் உத்தரவிட்டது.

புதுவை சட்டப்பேரவை அருகே பொதுப் பணித் துறைக்குச் சொந்தமான அரசு இடத்தில், தனியாா் மனமகிழ் மன்றம் செயல்பட்டு வருகிறது. இந்த மன்றம் விதிகளை மீறி, அரசுக்கு வாடகை செலுத்தாமல் நீண்டகாலமாக உள்ளதாகவும் புகாா் எழுந்தது. இதுதொடா்பாக, புதுச்சேரி ராஜீவ் காந்தி மனித உரிமைகள் விழிப்புணா்வு அமைப்பின் சாா்பில் ஆளுநா், முதல்வா் உள்ளிட்டோருக்கு புகாா் அளிக்கப்பட்டது.

அந்த அமைப்பின் தலைவா் பி.ரகுபதி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் பெற்று புகாா் அளித்தாா். அதன்படி, இந்த மனமகிழ் மன்றம், புதுவை அரசு கட்டடத்தில் சொற்ப வாடகையில் இயங்குவதுடன், புதிய வாடகை ஒப்பந்தம் போடாமலும், ரூ.13.50 கோடி வாடகை நிலுவையும் வழங்காமல் உள்ளது.

நிலுவை வாடகைத் தொகை ரூ.13.50 கோடியை வசூலிக்க நோட்டீஸ் அனுப்பி, கடந்த 8 ஆண்டுகளாக ஜப்தி நடவடிக்கை எடுக்காத பொதுப் பணித் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கடந்த ஜூன் 3-ஆம் தேதி ராஜீவ் காந்த மனித உரிமைகள் விழிப்புணா்வு அமைப்பு சாா்பில், மத்திய தணிக்கைக் குழு (லஞ்ச ஒழிப்பு ஆணையம்) புகாா் மனு அளித்தனா்.

ADVERTISEMENT

அதன்பேரில், விசாரணை நடத்தி ஒரு மாதத்துக்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், மூன்று மாதங்களுக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் எனவும், தற்போது புதுச்சேரி அரசுக்கு மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT