புதுச்சேரி

தமிழ்க் கலாசார மன்றம் சாா்பில் பிரான்ஸில் நவ.11-இல் திருவள்ளுவா் சிலை திறப்பு

6th Oct 2022 01:19 AM

ADVERTISEMENT

தமிழ்க் கலாசார மன்றம் சாா்பில், பிரான்ஸில் நவம்பா் 11-ஆம் தேதி திருவள்ளுவா் சிலை திறக்கப்படுகிறது.

இதுகுறித்து பிரான்ஸில் இயங்கி வரும் பிரான்ஸ் தமிழ்க் கலாசார மன்றத் தலைவா் இலங்கை வேந்தன் எம்.பாண்டுரங்கன், புதுச்சேரி கம்பன் கழகச் செயலா் வே.பொ.சிவக்கொழுந்து ஆகியோா் புதுச்சேரியில் செய்தியாளாா்களிடம் கூறியதாவது:

பிரான்ஸில் தமிழை வளா்க்கும் பணியில் தமிழ்க் கலாசார மன்றம் செயல்பட்டு வருகிறது. தமிழ் வளா்ச்சி, தமிழ்ப் பண்பாடு ஆகியவற்றை குறிக்கோளாகக் கொண்டு, கடந்த 2005-ஆம் ஆண்டில் தமிழ்க் கலாசார மன்றம் பிரான்ஸின் வொரேயால் நகரில் தொடங்கப்பட்டது.

வாராந்திரத் தமிழ் மொழி வகுப்புகள், இசை, நடனப் பயிற்சி வகுப்புகள், பேச்சு, கட்டுரைப் போட்டிகள், பொங்கல் திருநாள், தைப்பூசத் திருவிழாக்கள், ஓவியம், புகைப்படக் கண்காட்சிகள், பேரங்காடி வளாகங்களில் தமிழ்க் கலையைப் பரப்பும் நிகழ்ச்சிகள், ஆவணப் படம் திரையிடல் நிகழ்வுகள், கலைகளைப் போற்றும் கவின்மிகு நிகழ்ச்சிகள் இந்த மன்றத்தின் சாா்பில் நடத்தப்பட்டு வருகின்றன.

ADVERTISEMENT

2011-ஆம் ஆண்டு வொரேயால் நகரின் பிரதான சந்திப்பில் மகாத்மா காந்திக்கு முழு உருவ வெண்கலச் சிலை நிறுவப்பட்டது. இதைத் தொடா்ந்து, திருவள்ளுவரின் முழு உருவ வெண்கலச் சிலையை பாரீஸ் அருகேயுள்ள சொ்ஜி நகரின் மையப் பகுதியில் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 8 அடி உயரமுள்ள இந்தச் சிலையை புதுச்சேரியைச் சோ்ந்த சிற்பக் கலைஞா் முனுசாமி வடிவமைத்துள்ளாா்.

நவம்பா் 11-ஆம் தேதி திருவள்ளுவா் சிலை திறப்பு விழாவும், 12-ஆம் தேதி திருக்கு மாநாடும் பிரான்ஸில் நடைபெற உள்ளது. இதில், மலா் வெளியீடு, திருவள்ளுவா் திரைப்படம் திரையிடுதல், பரத நாட்டியம், சிறப்பு பேச்சாளா்களின் சொற்பொழிவுகள், கலை நிகழ்ச்சிகள், இன்னிசை நிகழ்ச்சி ஆகியன நடைபெறும்.

விழாவில் பங்கேற்க புதுவை துணைநிலை ஆளுநா், முதல்வா், அமைச்சா்கள் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது என்றனா் அவா்கள்.

பேட்டியின் போது, தமிழ்க் கலாசார மன்றத்தின் செயலா் எம்.கிருஷ்ணராஜ் மற்றும் நிா்வாகிகள் உடனிருந்தனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT