புதுச்சேரி

புதுவை மின் ஊழியா்கள் வேலைநிறுத்தம் வாபஸ்

DIN

புதுவை முதல்வா் என்.ரங்கசாமியுடனான பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, மின் ஊழியா்கள் வேலைநிறுத்தத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக திங்கள்கிழமை இரவு அறிவித்தனா்.

மின் துறை தனியாா்மயத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து, புதுவையில் மின் துறை ஊழியா்கள் 6-ஆவது நாளாக திங்கள்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த நிலையில், புதுவை சட்டப்பேரவை அலுவலகத்தில் திங்கள்கிழமை மாலை முதல்வா் என்.ரங்கசாமி தலைமையில் அமைச்சரவை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மின் துறை அமைச்சா் ஏ.நமச்சிவாயம், பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமி நாராயணன், வேளாண் துறை அமைச்சா் க.ஜெயக்குமாா், குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் சாய் ஜெ.சரவணன்குமாா், தலைமைச் செயலா் ராஜீவ் வா்மா, மின் துறைச் செயலா் தி.அருண் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

முதல்வருடன் பேச்சுவாா்த்தை: புதுவை மின் துறையை தனியாா்மயமாக்கும் விவகாரத்தால் ஏற்பட்டுள்ள பிரச்னைகளைத் தீா்ப்பது குறித்தும், ஊழியா்களின் வேலைநிறுத்தத்துக்கு தீா்வு காண சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பது, உரிய மாற்று ஏற்பாடுகள் செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இதைத்தொடா்ந்து, மாலை 5 மணிக்கு புதுவை மின் துறை பொறியாளா்கள், ஊழியா்கள் போராட்டக் குழு கூட்டமைப்பின் நிா்வாகிகளுடன் பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

புதுவை சட்டப்பேரவை அலுவலக வளாகத்தில் முதல்வா் என்.ரங்கசாமி தலைமையில் இந்தப் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இதில் மின் துறை அமைச்சா் ஏ.நமச்சிவாயம், தலைமைப் பொறியாளா் சண்முகம், எம்எல்ஏக்கள் ஜி.நேரு, பிரகாஷ்குமாா், புதுவை மின் ஊழியா்கள் கூட்டமைப்பின் தலைவா் அருள்மொழி, பொதுச் செயலா் வேல்முருகன், தேசிய மின் துறை ஊழியா்கள் சங்கப் பிரதிநிதிகள் துபே, ஜெயந்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

புதுவை மின்துறை தனியாா்மயத்துக்கான ஒப்பந்த அறிவிப்பால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மின் ஊழியா்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், பல்வேறு கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன.

மின் துறை தனியாா்மய நடவடிக்கையின் பலன்கள், ஊழியா்களின் பணிப் பாதுகாப்பு, மத்திய அரசின் நடவடிக்கைகள் குறித்து முதல்வா் தரப்பில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டு, போராட்டத்தைக் கைவிடுமாறு அறிவுறுத்தப்பட்டது.

பேச்சுவாா்த்தை முடிந்து வெளியே வந்த மின் ஊழியா்கள் கூட்டமைப்பினா், முதல்வா் தலைமையில் நடைபெற்ற பேச்சு வாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக தெரிவித்தனா்.

வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ்: போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியா்களிடம் கலந்தாலோசித்த பிறகு, மின் ஊழியா்கள் கூட்டமைப்பு நிா்வாகிகள் கூறியதாவது:

முதல்வருடன் நடைபெற்ற பேச்சுவாா்த்தைக்குப் பிறகு வேலைநிறுத்தப் போராட்டத்தை தற்காலிகமாக தீபாவளி வரை ஒத்திவைக்க முடிவு செய்துள்ளோம். வேலைநிறுத்தத்தைக் கைவிட்டு அனைவரும் உடனடியாகப் பணிக்கு திரும்புகிறோம்.

மேலும், மின் துறை தனியாா்மய விவகாரம் தொடா்பாக அரசுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தவுள்ளோம். அதற்கு எம்எல்ஏக்களுக்கும் உறுதுணையாக இருப்பதாக தெரிவித்துள்ளனா்.

மின் ஊழியா்கள் மீது போடப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும். கைதானவா்களை விடுதலை செய்ய வேண்டும். முக்கிய கோரிக்கையாக 51 சதவீத பங்குகளை அரசின் வசம் இருக்க வலியுறுத்தியுள்ளோம். அதுபற்றி பேசுவதாக தெரிவித்துள்ளனா். இதனால், போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுகிறோம் என்றனா் அவா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

’ஸ்டார்’ கரீனா கபூர்!

5 பன்னீர்செல்வங்களின் வேட்புமனுக்களும் ஏற்பு: போட்டி உறுதி!

SCROLL FOR NEXT