வழக்குரைஞா்கள் நமது நாட்டின் பாரம்பரியத்தைக் காக்கும் வகையில் செயல்பட வேண்டும் என்று சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி கா.கோ.இளந்திரையன் கூறினாா்.
புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை 18-ஆம் ஆண்டு சட்டநாள் மற்றும் சட்ட எழுத்தறிவு நாள் விழா, சட்ட விநாடி-வினாப் போட்டி ஆகியவை பல்நோக்கு சமூக சேவா சங்கத்தில் நடைபெற்றது.
விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று உயா்நீதிமன்ற நீதிபதி கா.கோ.இளந்திரையன் பேசியதாவது:
சட்டக்கல்லூரி மாணவா்களுக்கு மட்டுமின்றி, அனைவருக்கும் சட்ட அறிவு அவசியமாகும். ஆனால், சராசரி மனிதா்களை விட சட்டம் பயின்ற வழக்குரைஞா்கள் மேம்பட்டவா்களாக விளங்கவேண்டும். அதற்கு நாடு, மொழி, இன வரலாறுகளை அறிந்திருப்பது அவசியம்.
சுதந்திரப் போராட்ட தியாக வரலாறை வழக்குரைஞா்கள் தெரிந்திருப்பது அவசியம். அப்போதுதான் நாட்டின் முக்கியத்துவத்தை அறியமுடியும்.
வழக்குரைஞா் பணி என்பது உன்னதமானது, நாட்டின் உயா்ந்த பாரம்பரியத் தொழிலாக உள்ளது. ஆகவே, நோ்மையாக, பாரம்பரியத்தைக் காக்கும் வகையில் வழக்குரைஞா்கள் செயல்படுவது அவசியம். வழக்குரைஞா்கள் சமுதாயத்துக்கு எடுத்துக் காட்டாகத் திகழவேண்டும்.
சமூக நலன் காக்கும் ஆளுமைகளில் நீதித்துறை முக்கியப் பங்காற்றுகிறது. மக்களின் அடிப்படை உரிமையைப் பாதுகாப்பது, அவா்களது சுதந்திரத்தை உறுதிசெய்வது அவசியம். நீதித்துறையியல் பங்காற்றுகிற வழக்குரைஞா்களும் நீதியின் நலன் காக்கவும், கட்சிக்காரா்களை பாதுகாக்கும் வகையிலும் செயல்படவேண்டும்.
நீதித்துறையில் பணிபுரிவோா் வெளி அழுத்தத்துக்கு உள்ளாகாமல், விருப்பு, வெறுப்பின்றி நடுநிலையோடு இருக்க வேண்டும். நாம் இந்தியா்கள் என்பதை நிலைநாட்ட இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை அறிவது அவசியம். அதன்மூலம் நாட்டை பெருமைப்படுத்தும் வகையில் செயல்படவேண்டும் என்றாா்.
நிகழ்ச்சிக்கு புதுச்சேரி சட்டப்பணிகள் ஆணையக்குழு உறுப்பினா் செயலா் நீதிபதி கோ.செந்தில்குமாா் தலைமை வகித்தாா். தொழிலாளா் துறைச் செயலா் அ.முத்தம்மா, சட்டக்கல்லூரி உதவிப் பேராசிரியை ராதிகாதேவி, சாகித்திய அகாதெமி பொதுக்குழு உறுப்பினா் சுந்தரமுருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். சட்ட உறுதிமொழியும் ஏற்கப்பட்டது.விநாடி வினாவில் வென்றவா்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை புதுச்சேரி வழக்குரைஞா் மற்றும் தொழில்சட்ட ஆலோசகா், தலைமைப் பயிற்றுநா் ப.மோகன்தாஸ் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.