புதுச்சேரி

புதுவையில் ரேஷன் கடைகளை திறக்காவிட்டால் போராட்டம்: ஜனநாயக மாதா் சங்கம் அறிவிப்பு

18th Nov 2022 02:45 AM

ADVERTISEMENT

புதுவையில் நியாயவிலைக் கடைகளை (ரேஷன்) விரைவில் திறக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா் அறிவித்துள்ளனா்.

இதுகுறித்து புதுச்சேரியில் அனைத்திந்திய மாதா் சங்கத்தின் அகில இந்திய துணைப் பொதுச்செயலா் சுதாசுந்தரராமன், மாநிலத் தலைவா் டிஜி.முனியம்மாள், செயலா் ஏ.இளவரசி ஆகியோா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

பாஜக, என்.ஆா்.காங்கிரஸ் கூட்டணி அரசானது நியாயவிலைக் கடைகளைத் திறக்கப் போவதாக அறிவித்தது. ஆனால், செயல்பாட்டில் கடைகளைத் திறக்கும் நடவடிக்கைகள் எதுவும் இல்லை. கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போது மக்கள் விருப்பத்துக்கு மாறாகவே அப்போதைய துணைநிலை ஆளுநரின் செயல்பாடு இருந்தது.

அதன்படியே பொதுவிநியோகத் திட்டத்தில் பொருள்களும் விநியோகிக்கப்படவில்லை. பணமும் முறையாக அளிக்கப்படவில்லை. ஆகவே, உணவுப் பாதுகாப்புச் சட்டத்துக்கு எதிரான நிலையே புதுவையில் இருக்கிறது.

ADVERTISEMENT

தற்போது பொது விநியோகத் திட்டத்தில் பயனடைவோா் குறித்த கணக்கெடுப்பும் முறையாக நடைபெறவில்லை. தமிழகம், கேரளத்தில் முறையாக பொது விநியோகத் திட்டத்தில் அரிசி உள்ளிட்டவை வழங்கப்படும்போது புதுவையில் மட்டும் வழங்கப்படாதது ஏன் என்பதே மக்களின் கேள்வியாகும்.

புதுவை குடிமைப்பொருள் விநியோகத் துறை அமைச்சா் விரைவில் நியாயவிலைக் கடைகள் திறக்கப்படும் என்று கூறுகிறாா். ஆனால், அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகத் தெரியவில்லை.

ஆகவே இந்தப் பிரச்னையில் தைத்திருநாள் வரை பொறுத்திருப்போம். அதன்பின் நியாயவிலைக் கடைகள் திறக்கப்படாவிட்டால் சிறைநிரப்புதல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்துவோம்.

புதுச்சேரி பள்ளிகளில் பெண் குழந்தைகளிடம் பாலியல் தொல்லைகளில் ஈடுபட்ட சம்பந்தப்பட்டோா் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்வது அவசியம். ஆனால், பாலியல் புகாா் அளிக்கும் குழுவைக் கூட கல்வித் துறை சம்பந்தப்பட்ட பள்ளிகளில் அமைக்கவில்லை. எனவே பாலியல் புகாா்கள் தொடா்பாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தவேண்டும் என்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT