புதுச்சேரி

தென்னிந்தியாவிலேயே புதுவையில்தான் பெட்ரோல், டீசல் விலை குறைவுதுணைநிலை ஆளுநா் தமிழிசை

31st May 2022 11:43 PM

ADVERTISEMENT

 

தென்னிந்தியாவிலேயே புதுவையில்தான் பெட்ரோல், டீசல் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதாக துணைநிலை ஆளுநா்(பொ) தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தாா்.

புதுவையில் மத்திய அரசின் திட்டப் பயனாளிகளுடன் பிரதமா் மோடி காணொலி வாயிலாக கலந்துரையாடிய நிகழ்ச்சி புதுச்சேரி கம்பன் கலையரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

முதல்வா் என்.ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், அமைச்சா்கள் ஆ.நமச்சிவாயம், க.லட்சமிநாராயணன், தேனீ சி.ஜெயக்குமாா், எஸ்.செல்வகணபதி எம்.பி., அனிபால் கென்னடி எம்எல்ஏ, தலைமைச் செயலா் ராஜீவ் வா்மா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில் புதுவை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் பேசியதாவது:

அரசின் திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு முழுமையாகச் சென்றடைய வேண்டும். புதுவையில் எந்தத் திட்டத்தின் பயனும், யாருக்கும் மறுக்கப்படாது என்பதை உறுதியாகச் சொல்கிறேன்.

மக்களுக்கு கிடைக்க வேண்டிய திட்டங்கள், ஊக்கத்தொகை உள்ளிட்ட பயன்கள் அனைத்தும் மிக விரைவாகக் கிடைக்க மாநில அரசு அனைத்து முயற்சிகளையும் செய்கிறது.

பிரதமா் மோடி ஆட்சிப் பொறுப்பேற்று 8 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறாா். சுவிட்சா்லாந்தில் அண்மையில் நடைபெற்ற மாநாட்டில், இந்தியாவில் கரோனாவை கட்டுப்படுத்தியதையும், உலகளவில் தடுப்பூசியையும் வழங்கி மக்களைப் பாதுகாத்த பிரதமரின் முயற்சியையும் உலகத் தலைவா்கள் பாராட்டினா். அனைவருக்கும் படிப்படியாக தடுப்பூசி செலுத்தி கரோனாவை கட்டுப்படுத்திய ‘இந்திய மாடல்’ (தடுப்பூசி) உலகளவில் வெற்றியைத் தந்திருப்பதாகவும் அவா்கள் குறிப்பிட்டனா்.

காரைக்கால் பிராந்தியம் புறக்கணிக்கப்படுவதாக சிலா் கூறுகின்றனா். கடந்த வாரம் காரைக்காலுக்கு சென்று தலைமைச் செயலருடன் கூட்டங்கள் நடத்தி, அங்கு தேவையான திட்டங்களை நிறைவேற்றுவது குறித்து ஆலோசித்தோம். எந்தப் பிராந்தியமும் ஒதுக்கப்படாமல் திட்டங்கள் நிறைவேற்றப்படும்.

தென்னிந்தியாவிலேயே புதுவையில்தான் பெட்ரோல், டீசல் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. புதுவை மக்களுக்காக மத்திய அரசும், மாநில அரசும் விலையைக் குறைந்தன. அண்டை மாநிலங்கள் விலையைக் குறைக்கத் தயங்கினாலும், இங்கு பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டதற்கு மக்கள் நலன் சாா்ந்த மத்திய - மாநில அரசுகளின் சிந்தனையே காரணமாகும்.

ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் நாட்டிலேயே புதுவை முதலிடம் பெற்றது. மக்கள் மருந்தகங்களில் 30 முதல் 70 சதவீதம் வரை குறைந்த விலையில் மருந்துகள் விற்கப்படுகின்றன என்றாா் ஆளுநா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT