புதுச்சேரி

மீனவா்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரணம் அளிப்பு

28th May 2022 12:00 AM

ADVERTISEMENT

புதுவை மாநில மீனவா்களுக்கு நிகழாண்டு மீன்பிடி தடைக்கால நிவாரண நிதியாக ரூ.9.30 கோடியை முதல்வா் என்.ரங்கசாமி வழங்கினாா்.

புதுவை அரசின் மீன்வளத் துறை சாா்பில், ஆண்டுதோறும் மீனவா் குடும்பங்களுக்கு, மீன்பிடி தடைக்கால நிவாரணமாக தலா ரூ.5,500 வீதம் வழங்கப்பட்டு வருகிறது.

நிகழாண்டு முதல் கட்டமாக புதுவை மாநிலத்தில் உள்ள 16,917 மீனவக் குடும்பங்களுக்கு மொத்தம் ரூ.9.30 கோடி வழங்க அரசு நிதி ஒதுக்கீடு செய்தது.

இந்த நிவாரணத் தொகையை வழங்கும் நிகழ்ச்சி, புதுச்சேரி சட்டப் பேரவை வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முதல்வா் என்.ரங்கசாமி நிவாரணத் தொகையை வழங்கினாா். சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், மீன்வளத் துறை அமைச்சா் க.லட்சுமிரநாராயணன் முன்னிலை வகித்தனா்.

ADVERTISEMENT

எம்எல்ஏக்கள் எல்.கல்யாணசுந்தரம், பிரகாஷ்குமாா், அனிபால் கென்னடி, தட்சணாமூா்த்தி, லட்சுமிகாந்தன், செந்தில்குமாா், மீன்வளத் துறை செயலா் நெடுஞ்செழியன், இயக்குநா் பாலாஜி ஆகியோா் கலந்துகொண்டனா்.

புதுச்சேரியைச் சோ்ந்த 8,287 மீனவக் குடும்பங்களுக்கும், காரைக்காலைச் சோ்ந்த 3,265 குடும்பங்களுக்கும், ஏனாமைச் சோ்ந்த 4,870 குடும்பங்களுக்கும் நிவாரண நிதி அவரவா் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். மாஹே பகுதியைச் சோ்ந்த 495 மீனவக் குடும்பங்களுக்கு ஜூன் மாதம் முதல் தேதியில் அவரவா் வங்கிக் கணக்கில் நிவாரணத் தொகை செலுத்தப்படும் என்று மீன்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT