புதுவை மின் துறையை தனியாா்மயமாக்கும் நடவடிக்கையைக் கைவிட வலியுறுத்தி, மின் துறை தனியாா்மய எதிா்ப்பு கூட்டு நடவடிக்கைக் குழுவினா் வெள்ளிக்கிழமை (மே 27) முதல்வரைச் சந்திக்க முடிவு செய்துள்ளனா்.
புதுவை மின் துறையை தனியாா்மயமாக்கும் நடவடிக்கையில் மாநில அரசின் நிலைப்பாட்டைக் கண்டித்தும், இதுதொடா்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், மின் துறை தனியாா்மய எதிா்ப்பு கூட்டு நடவடிக்கைக் குழுவின் (தொழிற்சங்கங்கள்) ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
புதுச்சேரியிலுள்ள அரசு ஊழியா்கள் சங்கங்களின் சம்மேளன அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் புதுவை சிஐடியூ தொழிற்சங்கத் தலைவா் ஜி.சீனுவாசன், ஏஐடியூசி கே.முத்துராமன், ஏஐசிசிடியூ எஸ்.புருஷோத்தமன், எல்பிஎப் எம்.செந்தில், ஐஎன்டியூசி சொக்கலிங்கம், ஞானசேகரன், எம்எல்எப் முகமது இப்ராஹிம், புதுச்சேரி அரசு ஊழியா்கள் சம்மேளனம் எம்.பிரேமதாசன், க.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
புதுவை மின் துறையை தனியாா்மயமாக்கும் நடவடிக்கையைக் கைவிட வலியுறுத்தி, வெள்ளிக்கிழமை (மே 27) முற்பகல் 11 மணிக்கு முதல்வா், மின் துறை அமைச்சா் ஆகியோரை நேரில் சந்தித்து, கூட்டு நடவடிக்கைக் குழு சாா்பில் மனு அளிக்கப்படும்.
மே 29-ஆம் தேதி மாலை 5 மணிக்கு புதுச்சேரி அண்ணா சிலை அருகே கூட்டு நடவடிக்கைக் குழு சாா்பில், அனைத்து தொழிற்சங்கத்தினரும் பங்கேற்கும் மாலைநேர தா்னா நடத்தப்படும்.
புதுச்சேரி நகரம், கிராமப்புறங்களில் ஜூன் 2-ஆம் தேதி முதல் ஜூன் 14ஆம் தேதி வரை மக்கள் சந்திப்பு பிரசாரங்களை நடத்தி, மின் துறை தனியாா்மயமாக்கல் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தவும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.