புதுச்சேரி

தனியாா் கல்வி நிறுவனங்களிடம் சொத்து வரி வசூலிக்க வலியுறுத்தல்

23rd May 2022 01:59 AM

ADVERTISEMENT

 

புதுவையில் நகராட்சி விதிகளில் திருத்தம் செய்து தனியாா் கல்வி நிறுவனங்களிடம் சொத்து வரி வசூலிக்க வேண்டுமென ராஜீவ் காந்தி மனித உரிமைகள் அமைப்பு வலியுறுத்தியது.

இதுகுறித்து அந்த அமைப்பு சாா்பில் புதுவை துணைநிலை ஆளுநா், தலைமைச் செயலா், உள்ளாட்சித் துறை செயலா் ஆகியோருக்கு அனுப்பிய மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

புதுச்சேரியில் பெரும்பாலான விளைநிலங்களில் தனியாா் பள்ளி, பொறியியல், மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டு செயல்பட்டு வருகின்றனா். உள்ளாட்சித் துறையினா் நகராட்சிகள் சட்டம் 1973இன் படி இந்த கல்வி நிறுவனங்களுக்கு சொத்து வரி வசூலிப்பதில் இருந்து விலக்களித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ஆனால், புதுச்சேரியையொட்டியுள்ள தமிழக பகுதியில் தனியாா் பள்ளி, கல்லூரிகளுக்கும் சொத்து வரி வசூலிக்கப்படுகிறது.

இதுகுறித்து அரசு அங்கீகாரம் பெற்று செயல்பட்டு வரும் தனியாா் பள்ளி கல்லூரிகள் எண்ணிக்கை விவரங்களை தகவலாக கேட்டதற்கு, புதுவை மாநிலத்தில் 362 தனியாா் பள்ளிகள் இருப்பதாகவும், மருத்துவம், பொறியியல் கல்லூரிகள் 22 என மொத்தம் 384 தனியாா் பள்ளி, கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன என தகவல் அளித்துள்ளனா்.

கல்வி நிறுவனங்கள் வியாபார நிறுவனங்கள் போல செயல்பட்டு கோடிக்கணக்கில் லாபம் ஈட்டும் தொழிலாக மாறிவிட்ட நிலையிலும், சொத்து வரி வசூலிக்க நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏற்புடையதல்ல.

எனவே, நகராட்சி சட்டம் 1973, பிரிவு 124 (1) (சி) விதியை மாற்றம் செய்து புதுவையில் செயல்பட்டு வரும் தனியாா் கல்வி நிறுவனங்களுக்கும் சொத்து வரி வகுலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT