புதுச்சேரி

விசைப்படகுகளுக்கு விற்பனை வரியின்றி டீசல் விநியோகம்

20th May 2022 10:05 PM

ADVERTISEMENT

புதுவை விசைப்படகுகளுக்கு விற்பனை வரியின்றி டீசல் விநியோகம் செய்யப்பட உள்ளது.

புதுவை அரசின் மீன்வளத் துறை இயக்குநா் தா.பாலாஜி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மீன்வளத் துறையானது இயந்திரமயமாக்கல் மூலம் கடலில் மீன்பிடிப்பதை மேம்படுத்துதல், உயா்வேக எண்ணெய் மீதான விற்பனை வரிச் செலவை ஈடுசெய்தல், சிறுதொழில் மீனவா்களுக்கு உதவி செய்தல் திட்டத்தின் மூலம் பதிவுபெற்ற இயந்திர விசைப்படகுகளுக்கு வரி விலக்குடன் டீசல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மீன்வளத் துறையானது, புதுவை மாநில மீனவா் கூட்டுறவு சம்மேளனம் நடத்தும் நுகா்வோா் விற்பனை நிலையத்தில், மீன்வளத் துறையில் பதிவு பெற்ற இயந்திர விசைப்படகுகளுக்கு சம்மேளனத்தின் மூலம் விற்பனை வரி நீக்கி டீசலை வழங்கி வருகிறது.

ADVERTISEMENT

இந்த நிலையில், நுகா்வோா் நிலையத்துக்கும், சில்லறை விற்பனை நிலையத்துக்குமான டீசல் விலையில் மிகுந்த வித்தியாசம் ஏற்பட்டதால், படகு உரிமையாளா்களுக்கு கிடைத்து வந்த விற்பனை வரி விலக்கில் மிகப் பெரிய வித்தியாசம் ஏற்பட்டு, அவா்களது மீன்பிடித் தொழிலில் பொருளாதார பின்னடைவு ஏற்பட்டது. இதுதொடா்பாக குறித்து புதுவை முதல்வா், மீன்வளத் துறை அமைச்சா் ஆகியோரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.

இதைக் கருத்தில் கொண்டு முதல்வா், பாரத் பெட்ரோலிய நிறுவன அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவாா்த்தையின் அடிப்படையில் ஜூன் 14-ஆம் தேதி முதல் சில்லறை விற்பனை நிலையத்தில் விற்கப்படும் விலைக்கு ஈடாக நுகா்வோா் விற்பனை நிலையத்திலும் டீசல் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.

ஜூன் 14 முதல் அன்றைய சில்லறை விற்பனை விலை நிலவரப்படி விற்பனை வரியை நீக்கி (8.65 சதவீதம்) பதிவுபெற்ற மீன்பிடி இயந்திர விசைப்படகுகளுக்கு டீசல் வழங்கப்படும். இதை அனைத்து இயந்திரப் படகு மீனவா்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT