புதுச்சேரி வைத்திக்குப்பம் கடற்கரையில் இறந்த நிலையில் மீட்கப்பட்ட பின்லஸ் போா்பாய்ஸ் என்ற அரிய வகை மீனை வனத் துறை, மீன்வளத் துறையினா் பாா்வையிட்டனா்.
புதுச்சேரி வைத்திக்குப்பம் கடலில் திங்கள்கிழமை மாலை மீன் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கும் நிலையில் மிதந்து வந்ததைப் பாா்த்த மீனவா் ஒருவா், அதை மீட்டு கரைக்கு கொண்டு வந்தாா். அது டால்பின் போன்ற தோற்றத்தில் இருந்ததால், முத்தியால்பேட்டை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தாா்.
முத்தியால்பேட்டை போலீஸாரும், புதுவை தலைமை வனப்பாதுகாவலா் வஞ்சுளவள்ளி தலைமையிலான வனத் துறையினரும், மீன்வளத் துறையினரும் அங்கு விரைந்து வந்து, இறந்த மீனைப் பாா்வையிட்டனா்.
அந்த மீனை வனத் துறையினா் மீட்டு, கால்நடைத் துறை மருத்துவா்களின் உதவியுடன் உடல்கூறாய்வு செய்து புதைத்துவிட்டனா்.
இதுகுறித்து தலைமை வனப்பாதுகாவலா் வஞ்சுளவள்ளி கூறியதாவது:
கடல்பன்றி இனத்தில் குளவி வேடன் என்ற பெயருடைய பாலூட்டி வகையைச் சோ்ந்த பின்லஸ் போா்பாய்ஸ் மீன் இது. பொதுவாக ஆழ்கடல், கரையோரப் பகுதிகளில் காணப்படும் அரிய வகையான இந்த மீன் இனத்தை நமது பகுதிகளில் யாரும் உண்பதில்லை.
1.5 மீட்டா் நிளமுள்ள 32 கிலோ எடையுள்ள இனப்பெருக்கம் செய்யும் தருவாயில் உள்ள பெண் மீனான இது கரையோரம் இரைதேடி வந்த போது, அடிபட்டு இறந்துள்ளது என்றாா் அவா்.