புதுச்சேரி

கத்திரி வெயில் தொடக்கம்: விலங்குகள், பறவைகளைப் பராமரிக்க சிறப்பு ஏற்பாடு

5th May 2022 05:42 AM

ADVERTISEMENT

 

புதுச்சேரி: கத்திரி வெயில் தொடங்கியதையடுத்து, புதுவை வனத் துறை அலுவலக வளாகத்தில் பராமரிக்கப்படும் விலங்குகள், பறவைகளை வெப்பத்தின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக துணை வனப் பாதுகாவலா் வஞ்சுளவள்ளி அறிவுறுத்தினாா்.

புதுச்சேரி வனத் துறை தலைமை அலுவலகத்தில் மான்கள், குரங்குகள், மயில்கள், கிளிகள், மலைப் பாம்புகள், நட்சத்திர ஆமைகள் உள்ளிட்ட விலங்குகள் உள்ளன. புதுச்சேரி சுற்றுப்புற வட்டாரப் பகுதிகளில் பிடிபடும் பறவைகள், விலங்குகளும் இங்கு கொண்டுவரப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன.

கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க அங்குள்ள விலங்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மலைப் பாம்புகள், நட்சத்திர ஆமைகள் குளிா்ந்த நீரில் விடப்பட்டன. மான்கள், பாம்புகள் மீதும் குளிா்ந்த தண்ணீா் தெளிக்கப்பட்டு குளிா்விக்கப்பட்டன. இயற்கை நிழல் ஏற்படும் சூழலும் ஏற்படுத்தப்பட்டது.

ADVERTISEMENT

இதுகுறித்து துணை வனப் பாதுகாவலா் வஞ்சுளவள்ளி கூறியதாவது:

கத்திரி வெயில் தொடங்கியதையடுத்து, ஒரு மாதத்துக்கு இங்குள்ள வன விலங்குகளை குளிா்ந்த சூழ்நிலையில் பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மலைப் பாம்புகள், பிளமிங்கோ, நட்சத்திர ஆமைகளுக்கான நீரை மாற்றி அவற்றின் மீது குளிா்ந்த நீரை தெளிக்கிறோம். மான்கள் போன்ற விலங்குகள் இருக்கும் பகுதியை பசுமையான சூழலாக்கி பராமரிக்கப்படும்.

வெயிலின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த தினமும் காலை, மாலை வேளைகளில் அவற்றின் மீது குளிா்ந்த தண்ணீா் தெளித்து பராமரிக்கப்படும். சுழற்சி முறையில் தண்ணீரை மாற்றி வருகிறோம். மான் உள்ளிட்ட விலங்கினங்களுக்கு தா்பூசணி, கிா்ணி பழம், வெள்ளரி, உருளை, கேரட், பீட்ரூட், என பழம், காய்கறிகள், கீரைகள் வழங்கப்படுகின்றன.

பொதுமக்களும் வீட்டின் மாடிப் பகுதியில் தினமும் ஒரு பாத்திரத்தில் தண்ணீா் வைக்கலாம். பறவைகள் போன்றவை அந்த தண்ணீரை குடித்துச் செல்லும். அதேபோல, நிழல் தரும் வகையில் சிறிய வலைகளை அமைக்கலாம். கூடைகள் போன்றவற்றை கவிழ்த்து வைத்தாலும் அந்த நிழலில் பறவைகள் சிறிது இளைப்பாறி செல்லும். குடிநீருடன் தானியங்கள், பழங்கள், தா்பூசணி போன்றவற்றை சாப்பிட்டு மீதமுள்ளவற்றையும் பறவைகளுக்காக வெளியே வைக்கலாம்.

வீடுகளுக்குள் பாம்புகள் வர வாய்ப்பு: தற்போது, கோடை வெயில் என்பதால், குளிா்ந்த இடங்களை நோக்கி பாம்பு போன்றவை வரும். தண்ணீா் தேங்கும் பகுதிகள், வீடுகளுக்கும் பாம்பு புகுவதற்கு வாய்ப்புள்ளது. எனவே, கவனமாக இருக்க வேண்டும். வீடுகளுக்குள் பாம்பு வந்தால், புதுவை வனத் துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கலாம். இதற்காக 24 மணி நேரமும் இயங்கும் வனத் துறை குழுவினா், விரைந்து வந்து பாம்பை பிடித்து பத்திரமாக கொண்டு செல்வா் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT