புதுச்சேரி

புதுச்சேரியில் 11 இடங்களில் தொழிற்சங்கத்தினர் மறியல்: 2,000 பேர் கைது

29th Mar 2022 11:36 AM

ADVERTISEMENT

புதுச்சேரி: புதுச்சேரியில் ஏஐடியூசி, சிஐடியு, ஐஎன்டியூசி, எல்பி எஃப், ஏஐடியுசி, என்டிஎல்எப் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சார்பில் அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தையொட்டி இரண்டாவது நாளாக முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையொட்டி புதுச்சேரியில் புதிய பேருந்து நிலையம், திருக்கனூர், பாகூர், சேதராப்பட்டு, வில்லியனூர், தவளகுப்பம், மதகடிப்பட்டு உள்ளிட்ட 11 இடங்களில் தொழிற்சங்கத்தினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி புதிய பேருந்து நிலையம் அருகே ஏஐடியூசி பொதுச்செயலாளர் சேது செல்வம் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கத்தினர் திரண்டு பேரணியாக வந்து பேருந்து நிலையம் அருகே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ADVERTISEMENT

இதேபோல் சிஐடியு மாநிலச் செயலர் சீனிவாசன் தலைமையில் ராஜா தியேட்டர் சந்திப்பில் மறியலில் ஈடுபட்டனர். ஐஎன்டியூசி தலைவர் பாலாஜி தலைமையில் இந்திரா காந்தி சிலை அருகே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 11 இடங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர். 

புதுச்சேரி அண்ணா சிலை அருகே திமுக அமைப்பாளர் சிவா தலைமையில் திமுக எம்எல்ஏக்கள், காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக கட்சி நிர்வாகிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் மத்திய அரசைக் கண்டித்தும், புதிய தொழிலாளர் சட்டத் திருத்தங்களை கைவிட வேண்டும், அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை போராட்டத்தில் வலியுறுத்தினர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT