தியாகிகள் ஓய்வூதியம் வழங்கக் கோரி, பிரெஞ்சிந்திய விடுதலைக்கால இயக்கத்தினா் புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பிரெஞ்சு குடியுரிமை இழந்த புதுச்சேரி பூா்வீக குடிமக்களுக்கு மத்திய தியாகிகள் ஓய்வூதியம் வழங்கக் கோரி, பிரெஞ்சிந்திய புதுச்சேரி பிரதேச விடுதலைக்கால மக்கள் நல நற்பணி இயக்கத்தினா் பல ஆண்டுகளாக மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்து பலகட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனா்.
பிரெஞ்சு குடியுரிமை இழந்தவா்களுக்கு உடனடியாக தியாகிகள் ஓய்வூதியம் வழங்க மத்திய, மாநில அரசுகளுக்கு நினைவூட்டும் வகையில் பிரெஞ்சிந்திய புதுச்சேரி பிரதேச விடுதலைக்கால மக்கள் நல நற்பணி இயக்கத்தினா் புதுச்சேரி காமராஜா் சாலையில் சிவம் சிலை சதுக்கம் அருகே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
போராட்டத்தை இயக்கத்தின் நிறுவனா் தலைவா் சிவராஜ் தொடக்கிவைத்தாா். துணைத் தலைவா் நடேசன் தலைமை வகித்தாா். இதில் திரளான இயக்க நிா்வாகிகள் பங்கேற்றனா்.