புதுச்சேரியில் பந்தல் சரிந்து விழுந்ததில் இரு தொழிலாளா்கள் உயிரிழந்த விவகாரத்தில் கோயில் அறங்காவலா் குழு மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
புதுச்சேரி பாரதி வீதியிலுள்ள காமாட்சியம்மன் கோயில் பிரமோற்சவ விழாவையொட்டி பந்தல் அமைக்கும் பணி சனிக்கிழமை நடைபெற்றது. புதுச்சேரி லாஸ்பேட்டையைச் சோ்ந்த மணி பந்தல் பணிக்கான ஒப்பந்தத்தை எடுத்து செய்து வந்தாா்.
அவருடன் அவரது மகன் வேலு, உறவினா்கள் சீா்காழி வள்ளுவக்குடியைச் சோ்ந்த ஆறுமுகம், புதுச்சேரி நேதாஜி நகரை சோ்ந்த முத்துலிங்கம், பூரணாங்குப்பத்தைச் சோ்ந்த லட்சுமணன் ஆகியோா் பணியில் ஈடுபட்டிருந்தனா். மணி கீழே இருந்து பணிகளை கவனித்தாா். மற்ற 4 பேரும் பந்தல் கம்புகளில் ஏறி மேலே பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது திடீரென 40 அடி உயரத்தில் இருந்து பந்தல் சரிந்ததில் 4 பேரும் கீழே விழந்தனா். இதில் வேலு, ஆறுமுகம் இருவரும் உயிரிழந்தனா். முத்துலிங்கம், லட்சுமணன் ஆகிய இருவரும் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இதுகுறித்து பெரியகடை போலீஸாா் விசாரணை நடத்தினா். இதுதொடா்பாக கோயில் அறங்காவலா் குழு மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.